சென்னையில் புரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்


சென்னையில் புரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:30 PM GMT (Updated: 7 Oct 2018 8:16 PM GMT)

சென்னையில் புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ் அணி.

சென்னை,

சென்னையில் நேற்று தொடங்கிய புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு தொடங்கியது. அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வரை நடைபெறும் இந்த கபடி திருவிழாவில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி ‘ஏ’ பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறையும், எதிர்பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும். இதை தவிர்த்து எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் ‘வைல்டு கார்டு’ சுற்றில் சந்திக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சும் அணியும் பலப்பரீட்சை நடத்தின. தமிழ் தலைவாஸ் தரப்பில் அஜய் தாகூரும், பாட்னா தரப்பில் கேப்டன் பர்தீப் நார்வாலும் தங்களது முதல் ரைடுக்கு சென்றனர்.

ரைடு செல்வதில் வல்லவரான பர்தீப் நார்வாலை ஆரம்பத்திலேயே தமிழ் தலைவாஸ் அணியினர் மடக்கி பிடித்தனர். அதன் பிறகு கேப்டன் அஜய் தாகூரின் அசர வைக்கும் ரைடும், அமித் ஹூடா, மன்ஜீத் சிலார் ஆகியோரது சாதுர்யமான டேக்கிள்ஸ்களும் தமிழ் தலைவாஸ் அணிக்கு மளமளவென புள்ளிகளை கொண்டு வந்து சேர்த்தது.

கடந்த ஆண்டு எதிராளியை மடக்கி பிடிப்பதில் தான் தலைவாஸ் வீரர்கள் சோடை போனார்கள். ஆனால் இந்த சீசனில் அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள் நன்கு கைகொடுத்தது. குறிப்பாக டேக்கிள்ஸ் செய்வதில் வீரர்கள் இடையே காணப்பட்ட அபாரமான ஒருங்கிணைப்பு பாட்னாவை மிரள வைத்தது. முதல் நிமிடத்தில் இருந்தே தங்களது ஆதிக்கத்தை வலுவாக நிலை நிறுத்திய தமிழ் தலைவாஸ் அணியினர் முதல் பாதிக்குள் இரண்டு முறை பாட்னாவை ஆல்-அவுட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 26-8 என்ற புள்ளி கணக்கில் பலமான முன்னிலை கண்டது.

பிற்பாதியிலும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் தமிழ் தலைவாஸ் அணியினர் பட்டையை கிளப்பினர். அடுத்த 3 நிமிடத்திற்குள் மீண்டும் ஒரு முறை பாட்னா அணி ஆல்-அவுட் ஆகி ‘சரண்’ அடைந்தது. அதன் பிறகு பாட்னா வீரர்கள் எழுச்சி பெற போராடினர். கடைசி நிமிடத்தில் தலைவாஸ் வீரர்களை ஆல்-அவுட் ஆக்கியது மட்டுமே அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதலாகும்.

முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தி இந்த சீசனை அட்டகாசமாக தொடங்கி இருக்கிறது. 18 முறை ரைடுக்கு சென்ற தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் அதில் 14 புள்ளிகள் எடுத்தது, வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. அதே சமயம் பர்தீப் நார்வால் ரைடு மூலம் 11 புள்ளி எடுத்தாலும், 4 முறை அவுட் ஆனது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

அடுத்து நடந்த மும்பை - புனேரி பால்டன் அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி 32-32 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. 27 வினாடிகள் இருந்த போது மும்பை அணி 2 புள்ளி கூடுதலாக பெற்று முன்னிலை வகித்த நிலையில், அந்த 2 புள்ளியையும் கடைசி கட்டத்தில் புனே அணி எடுத்து தோல்வியில் இருந்து தப்பியது. புனே அணியில் நிதின் தோமரும் (15 புள்ளி), மும்பை அணியில் சித்தார்த் தேசாயும் (14 புள்ளி) அதிகபட்ச புள்ளிகளை குவித்தனர்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஆட்டங்களில் புனேரி பால்டன்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- உ.பி.யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

உள்ளூரில் முதல் வெற்றி

தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஆண்டு புரோ கபடியில் அறிமுகம் ஆனது. முதல் சீசனில் சொதப்பிய தமிழ் தலைவாஸ் அணி தனது பிரிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. சென்னையில் அந்த அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் தோல்வியே மிஞ்சியது. ஆனால் இந்த ஆண்டு உள்ளூரில் முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று, ரசிகர்களை குதூகலப்படுத்தியிருக்கிறது.


Next Story