“அணியில் இருந்து அடிக்கடி நீக்கியதால் மனஉளைச்சலுக்கு உள்ளானேன்” - கோபிசந்த் மீது ஜூவாலா கட்டா மறைமுக குற்றச்சாட்டு


“அணியில் இருந்து அடிக்கடி நீக்கியதால் மனஉளைச்சலுக்கு உள்ளானேன்” - கோபிசந்த் மீது ஜூவாலா கட்டா மறைமுக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Oct 2018 10:15 PM GMT (Updated: 10 Oct 2018 9:53 PM GMT)

அணியில் இருந்து அடிக்கடி நீக்கியதால் மனஉளைச்சலுக்கு உள்ளானேன் என கோபிசந்த் மீது ஜூவாலா கட்டா மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய பேட்மிண்டனில் இரட்டையர் பிரிவில் முன்னணி வீராங்கனையாக வலம் வந்த ஜூவாலா கட்டா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார். “2006-ம் ஆண்டு இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பொறுப்புக்கு அந்த நபர் வந்த பிறகு, என்னை தேசிய அணியில் இருந்து தூக்கி எறிந்தார். இத்தனைக்கும் அப்போது நான் தேசிய சாம்பியன். சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தேன். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிறகு மறுபடியும் என்னை நீக்கினார்கள். அடிக்கடி நீக்கம், அணித்தேர்வில் அவர் காட்டிய பாகுபாடு என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. நான் பேட்மிண்டன் விளையாடுவதை நிறுத்திக்கொண்டதற்கு இதுவும் முக்கியமான ஒரு காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

2006-ம் ஆண்டில் இருந்து தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கோபிசந்த் இருந்து வருகிறார். அவரைத் தான் ஜூவாலா கட்டா மறைமுகமாக சாடியிருப்பதாக தெரிகிறது. ஒற்றையர் பிரிவில் ஆடும் வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமே கோபிசந்த் முக்கியத்துவம் அளிக்கிறார் என்று ஏற்கனவே ஜூவாலா கட்டா வெளிப்படையாக கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

ஐதராபாத்தை சேர்ந்த 35 வயதான ஜூவாலா கட்டா, உலக பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் அஸ்வினியுடன் இணைந்து வெண்கலப்பதக்கம் கைப்பற்றி வரலாறு படைத்தவர். காமன்வெல்த் விளையாட்டில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்று இருக்கிறார்.


Next Story