பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து 3-வது தோல்வி + "||" + Pro Kabaddi league: Tamil Thalaivas team was the 3rd defeat

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து 3-வது தோல்வி

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து 3-வது தோல்வி
புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியை தழுவியது.
சென்னை,

6-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

‘பி’ பிரிவில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்சுடன் மல்லுகட்டியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, எதிரணியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 8-9 என்று இருந்த போது வரை மட்டுமே சற்று தாக்குப்பிடித்து ஆடுவது போல் தெரிந்தது.


பெங்களூரு புல்ஸ் வீரர் பவான் செராவத் தனி வீரராக தமிழ் தலைவாசை சூறையாடினார். தொடக்கத்தில் ஒரு ரைடில் 3 புள்ளிகள் எடுத்த அவர் முதல்பாதி ஆட்டம் நிறைவடைய 3 நிமிடங்கள் இருந்த போது ஒரே ரைடில் தமிழ் தலைவாசின் 5 வீரர்களை காலி செய்தார். இதனால் பெங்களூரு அணியின் புள்ளி எண்ணிக்கை கிடுகிடுவென எகிறியது. முதல் பாதியில் அவர்கள் 28-12 என்ற புள்ளி கணக்கில் மிக வலுவான முன்னிலை பெற்றனர்.

இதனால் பிற்பாதியில் பெங்களூரு புல்ஸ் அணி வீரர்கள் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடினார். வழக்கம் போல் 2-வது பாதியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் கடும் போராட்டம் கொடுத்தாலும் அது தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 48-37 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு புல்ஸ் வீரர் பவான் செராவத் ரைடு மூலம் மட்டும் 20 புள்ளிகளை அள்ளினார். தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் 19 புள்ளிகள் சேர்த்தார்.

தொடக்க ஆட்டத்தில் பாட்னா பைரட்சை வென்ற தமிழ் தலைவாஸ் அணி, அதன் பிறகு அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே உ.பி.யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளிடம் மண்ணை கவ்வியிருந்தது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா (மும்பை அணி)- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி முதல் பாதியில் 15-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை கண்டது.

பிற்பகுதியில் மும்பை வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். 10-வது நிமிடத்தில் ஆல்-அவுட் செய்து ஜெய்ப்பூரின் புள்ளியை (22-23) நெருங்கினர். அதன் பிறகு இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்த வண்ணம் இருந்தனர். 30-27 என்று முன்னிலை பெற்றிருந்த ஜெய்ப்பூர் அணியினர் கடைசி கட்டத்தில் ‘பிடி’யை நழுவ விட்டனர். பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 39-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூரை தோற்கடித்து முதலாவது வெற்றியை சுவைத்தது. சித்தார்த் தேசாய் (13 புள்ளி), ரோகித் பாலியன் (7 புள்ளி) ஆகியோர் மும்பை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.

இன்றுடன் சென்னை சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது. இன்றைய ஆட்டங்களில் உ.பி.யோத்தா- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.