பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது பெங்கால் வாரியர்சிடமும் வீழ்ந்தது + "||" + Pro Kabaddi League Tamil talaivas team Failure continues The Bengal Warrior also fell

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது பெங்கால் வாரியர்சிடமும் வீழ்ந்தது

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது பெங்கால் வாரியர்சிடமும் வீழ்ந்தது
புரோ கபடி லீக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடமும் தமிழ் தலைவாஸ் அணி மண்ணை கவ்வியது.
சென்னை,

6-வது புரோ கபடி லீக் தொடரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு அரங்கேறிய 10-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்சை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இரு அணி வீரர்களும் ரைடு மூலமே புள்ளிகளை எடுத்த வண்ணம் இருந்தனர். 10-7 என்று தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றிருந்த போது, எதிரணியில் ராகேஷ் நார்வால் மட்டுமே களத்தில் நின்றார்.

பிறகு அவர் ரைடு மூலம் தலைவாஸ் வீரர்களை மூன்று பேரை அவுட் செய்து 10-10 என்று சமனுக்கு கொண்டு வந்தார். அது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது. அதன்பிறகு படிப்படியாக பெங்கால் அணியின் கை ஓங்கியது. தலைவாஸ் வீரர்கள் கடுமையாக போராடியும் சரிவில் இருந்து எழுச்சி பெற முடியவில்லை. முடிவில் பெங்கால் வாரியர்ஸ் அணி 36-27 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை தோற்கடித்தது.

அதிகபட்சமாக பெங்கால் வாரியர்ஸ் வீரர் மனிந்தர்சிங் 9 புள்ளி எடுத்தார். தொடக்க ஆட்டத்தில் பாட்னா பைரட்சை தோற்கடித்த தமிழ்தலைவாஸ் அணி அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் (உ.பி.யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்சுக்கு எதிராக) தோல்வியை தழுவியுள்ளது.

முன்னதாக இதே மைதானத்தில் நடந்த மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 43-41 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த மோதலில் ஒரு கட்டத்தில் 37-37 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போதும், கடைசி நேரத்தில் பாட்னா அணி வெற்றிக்கனியை தட்டிப்பறித்தது.

இத்துடன் சென்னை சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தது. அடுத்த சுற்று ஆட்டங்கள் அரியானா மாநிலம் சோனிபட்டில் நடக்கிறது. சோனிபட்டில் இன்று நடக்கும் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன்- தபாங் டெல்லி (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.