‘பதக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை!' -ஹிமா தாஸ்


‘பதக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! -ஹிமா தாஸ்
x
தினத்தந்தி 20 Oct 2018 9:11 AM GMT (Updated: 20 Oct 2018 9:11 AM GMT)

அசாமில் பிறந்த அசத்தல் தடகள வீராங்கனை, ஹிமா தாஸ். 400 மீட்டர் ஓட்டத்தில் நடப்பு தேசிய சாதனைக்குச் சொந்தக்காரரான ஹிமா, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை.

சொந்த ஊர் பெயரை இணைத்து, ‘திங் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் ஹிமா தாசின் அதிரடிப் பேட்டி...

வருகிற 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் பதக்கம் வெல்ல வேண்டுமானால் உங்கள் ஓட்ட நேரத்தில் 3 வினாடி களைக் குறைக்க வேண்டும். அதற்காக நீங்கள் வித்தியாசமாக எதுவும் செய்கிறீர்களா?

நான் பொதுவாக பதக்கங்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், நேர அளவு எனக்கு மிக முக்கியமானதுதான். எல்லா தடகள, வீரர், வீராங்கனைகளும் உலக உச்சப் போட்டியான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் அந்த மாதிரி சிந்திக்கவில்லை. எனது ஓட்ட நேர அளவைப் பொறுத்தவரை, என்னுடைய பயிற்சி வேளைகளில் அதில் நான் கவனம் செலுத்துவேன். ஆனால் எல்லாமே என் பயிற்சியாளர் முடிவைப் பொறுத்தது, அவர் என்ன தீர்மானிக்கிறார் என்பதைப் பொறுத்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீ. ஓட்டத்தில் தகுதி இழப்புச் செய்யப்பட்டதை எப்படிச் சமாளித்தீர்கள்?

சில நேரங்களில் இப்படி நடக்கும்தான். நாம் அதையே திரும்பி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

இதுபோன்ற பின்னடைவுகளைக் கையாளுவதற்கு உங்களுக்கு யார் உதவி செய்கிறார்கள்?

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை எனக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளார்கள், ஆதரவான பெற்றோர் இருக்கிறார்கள். பின்னடைவான நேரங்களில் நான் தொலைபேசியில் அவர்களை கூப்பிட்டுப் பேசுவேன், ஊக்கமூட்டும் வீடியோக்களையும் பார்ப்பேன்.

உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூற முடியுமா?

நான் ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவள். சரியாகச் சொல்வதென்றால், எங்கள் குடும்பத்தில் மொத்தம் 17 உறுப்பினர்கள். எங்கள் பெரியப்பாவும், பெரியம்மாவும்தான் அலுவலகப் பணிபுரிகிறார்கள். எங்கப்பாவும், குடும்பத்தில் மற்றும் உறுப்பினர்களும் விவசாயத்திலேயே ஈடுபட்டுள்ளனர். எங்கப்பா எம்.ஏ. முடித்தவர்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு தீ விபத்தில் அவரது சான்றிதழ்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. அதனால் அவரால் வேலை எதிலும் சேர முடியவில்லை. எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக கொஞ்சம் இடம் இருந்ததால் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். மீன் வளர்ப்பு முதல் காய்கறிச் சாகுபடி வரை பலதிலும் எங்கள் குடும்பம் ஈடுபட்டது. மொத்தக் குடும்பத்திலும் இருவர் மட்டுமே பணிபுரிய, மற்றவர்கள் எல்லாம் விவசாயம் செய்ய, 17 பேரின் தேவைகளை ஈடுசெய்வது கடினமாக இருந்தது. எனவே நான் எனக்கென்று எதையும் கேட்டதில்லை. பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்குப் போனபோது கூட நான் எனக்கென்று ஷூ எதுவும் வேண்டும் என்று வீட்டில் கேட்கவில்லை. ஒரு சிறிய பயிற்சிப் போட்டிக்குப் போவது போல் சொல்லிவிட்டேன்.



நீங்கள் பின்லாந்தில் தங்கப் பதக்கம் வென்றபோது உங்கள் குடும்பத்தினரின் ‘ரியாக்சன்’ எப்படி இருந்தது?

நான் பின்லாந்தில் உலக சாம்பியன் ஆனபோது, சாதாரணமாகவே இருந்தேன். போட்டிக்குப் பின் எனது அறைக்குத் திரும்பிய நான், வழக்கம்போல் வீட்டுக்கு போன் செய்தேன். போனை எடுத்த அப்பாவிடம், ‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நாங்கள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம்... இப்போது தூங்கப்போகிறோம்’ என்றார். உடனே, ‘நான் உலக சாம்பியன் ஆகியிருக்கிறேன், நீங்கள் தூங்கப் போகிறீர்களா?’ என்றேன். அப்பா, ‘நடந்ததெல்லாம் இருக்கட்டும்மா... நாளைக் காலையில பேசிக்கலாம்’ என்றார். மறுநாள் காலையில் போனில் பேசியபோதுதான், முதல் நாள் இரவு என்ன நடந்தது என்று அவர் விளக்கினார். தங்கள் வயலில் விளைந்த காய்கறிகளை எடுத்துக்கொண்டு அவர் மார்க்கெட்டுக்கு போனபோது, வரிசையாக டி.வி. வேன்கள் சீறிச் சென்றிருக்கின்றன. அவை எங்கள் வீட்டுக்குத்தான் செல்கின்றன என்பது அப்போதே அவருக்குப் புரிந்துவிட்டது.

உங்களை விளையாட்டில் தீவிரமாக ஈடுபட வைத்தது எது?

எங்கண்ணன்களுடன் விளையாடி வளர்ந்த எனக்கு, ஒரு பெண்பிள்ளை போல இருப்பது பிடிக்காது. நான் அவர்களுடன் கால்பந்து அல்லது ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டேயிருப்பேன். மரம் ஏறி ப் பழம் பறிப்பது, ஆடுவது, ஓடுவது என்று துறுதுறுவென்று இருப்பேன். ஆனால் நான் வளர வளர, மற்ற பசங்களுடன் விளையாடக்கூடாது என்று என் அண்ணன்கள் தடுத்தார்கள். அப்போதெல்லாம், எங்கப்பா வந்து எங்களுடன் விளையாடுவார். ஒரு கட்டத்தில் நான் தீவிரமாக கால்பந்து விளையாட ஆரம்பித்தேன். அசாமில் ஒன்றிரண்டு கால்பந்து கிளப்களில் ஆடியிருக்கிறேன். அதற்காக எனக்குப் பணமும் கிடைத்தது. ஆனால் யதேச்சையாக ஓட்டத்தில் ஈடுபட்டேன், மாவட்ட அளவிலான போட்டி ஒன்றில் எனது பயிற்சியாளரின் கவனத்துக்கு உள்ளானேன். நான் கால்பந்து விளையாடியது, இன்றும் தொடர் ஓட்டம் போன்றவற்றில் அணியாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

உங்களின் உடனடி இலக்குகள் என்னென்ன?

அடுத்து நடைபெறப்போகும் போட்டிகள் பற்றிய மிகச் சரியான விவரம் தெரியவில்லை. ஆனால் நான் தேசிய முகாமில் விரைவில் இணையவிருக்கிறேன்.

ஓடாத நேரங்களில் நீங்கள் உங்களை எப்படி ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்கிறீர்கள்?

இசை கேட்பதே என்னை ரிலாக்ஸ் செய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வீடு செல்வதே அரிதாகிவிட்டது. அப்படி அரிதாகச் செல்லும்போதும், ஒன்றிரண்டு நாட்கள்தான் தங்குவேன். சமீப காலமாக எனது நாட்கள் மிகவும் நெருக்கடியாகத்தான் இருக்கின்றன.

குறுகிய காலத்தில் நிறைய வெற்றிகளைச் சந்தித்திருக்கிற நீங்கள், நெருக்கடி எதையும் உணர்கிறீர்களா?

இல்லை. உங்களைப் போன்றோரின் ஆசீர்வாதம் இருந்தால் போதும், எதையும் நான் கையாளுவேன்!

Next Story