பிற விளையாட்டு

புரோ கபடி: அரியானா, உ.பி.யோத்தா அணிகள் வெற்றி + "||" + Pro Kabaddi: Haryana, UPYota teams win

புரோ கபடி: அரியானா, உ.பி.யோத்தா அணிகள் வெற்றி

புரோ கபடி: அரியானா, உ.பி.யோத்தா அணிகள் வெற்றி
புரோ கபடி தொடரில் நேற்றைய ஆட்டங்களில் அரியானா, உ.பி. யோத்தா அணிகள் வெற்றி பெற்றன.

பாட்னா, 

புரோ கபடி தொடரில் நேற்றைய ஆட்டங்களில் அரியானா, உ.பி. யோத்தா அணிகள் வெற்றி பெற்றன.

புரோ கபடி

6-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா-தபாங் டெல்லி அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்ததால் 3 நிமிடங்கள் இருக்கும் போது 35-35 என்ற புள்ளி கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு கடைசி நிமிடங்களில் அபாரமாக ஆடிய உ.பி.யோத்தா அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. உ.பி. அணியில் ஸ்ரீகாந்த் ஜாதவ் 12 புள்ளிகளும், பொறுப்பு கேப்டன் பிரசாந்த் குமார் ராய் 11 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 7-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பதிவு செய்த 3-வது வெற்றி இதுவாகும்.

பாட்னா தோல்வி

இதைத் தொடர்ந்து நடந்த இன்னொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 43-32 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. பாட்னா கேப்டன் பர்தீப் நார்வால் ரைடு மூலம் 14 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லை. பாட்னாவுக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும்.

போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளைய ஆட்டங்களில் புனேரி பால்டன்-குஜராத் பார்ச்சுன் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.