துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 5 Nov 2018 10:00 PM GMT (Updated: 5 Nov 2018 8:12 PM GMT)

ரன் குவிக்கும் மிஷின் என்று வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு நேற்று 30-வது வயது பிறந்தது.


* ரன் குவிக்கும் மிஷின் என்று வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு நேற்று 30-வது வயது பிறந்தது. விராட்கோலி தனது பிறந்த நாளை மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி விராட்கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், டோனி, வி.வி.எஸ். லட்சுமண், ஷேவாக், முகமது ஷமி, விருத்திமான் சஹா உள்பட கிரிக்கெட் உலகினர் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் பலரும் டுவிட்டர் மூலம் விராட்கோலிக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

* ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் டெல்லி-இமாசலபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டெல்லியில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். இளம் வீரருக்கு கேப்டன் பதவியை அளிக்க இது சரியான தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வாளர்களிடம் எனது பெயரை கேப்டன் பதவிக்கு பரிசீலனை செய்ய வேண்டாம் என்று தெரிவித்து விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய கேப்டன் வெற்றியை பெற உதவிகரமாக இருப்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார். கம்பீரின் வேண்டுகோளை ஏற்று டெல்லி அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணாவும், துணை கேப்டனாக துருவ் ஷோரேயும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* இந்திய சுற்றுப்பயணத்துக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சிலர் விலகி இருப்பதற்கு வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கார்ல் ஹூபெர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாட சில வீரர்கள் ஆர்வம் காட்டாதது வெட்கக்கேடானதாகும். அணிக்காக விளையாட அவர்கள் ஆர்வம் காட்டாதது ஏன்? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு அணிக்காக விளையாட ஆர்வம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் முன்னேற்றம் காண சற்று காலம் பிடிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

* 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 29-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக வீரர்கள் விடுவிப்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றை அணி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. வீரர்கள் பரிமாற்றம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாயக அணியான டெல்லி டேர்டெவில்ஸ்க்கு திரும்புகிறார் என்று செய்திகள் வெளியானது. கடந்த சீசனில் ஷிகர் தவானை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தக்க வைக்கவில்லை. அவரை ஏலத்தின் மூலம் ரூ.5.2 கோடிக்கு எடுத்தது. ஆனால் தனக்கு நிர்ணயித்த விலையில் ஷிகர் தவான் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஷிகர் தவானை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விற்று விட்டு அவருக்கு பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள விஜய் சங்கர் (ரூ.3.2 கோடி), ஷபாஸ் நதீம் (ரூ.3.2 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.55 லட்சம்) ஆகியோரை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி வாங்கி உள்ளது. இந்த தகவலை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Next Story