பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

* பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிதாலி ராஜ் 47 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். பின்னர் 35 வயதான மிதாலி ராஜ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய உத்வேகம் அளிப்பதாகும். அதேநேரத்தில் எத்தனை ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நல்ல மாற்றத்தை கண்டு வருகிறது. அணியில் நிறைய இளம் வீராங்கனைகள் உள்ளனர். எனவே நான் எப்படி ஆடுகிறேன் என்பதை விட அணியை குறித்து சிந்திக்க வேண்டிய நேரமாக இதனை கருதுகிறேன். தற்போதைய இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. எனவே இது நான் ஆட்டத்தை விட்டு விலக சரியான தருணம் என்று நினைக்கிறேன். எனவே 20 ஓவர் போட்டியில் இது தான் எனது கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும் என்று கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

* நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக் ஹெஸ்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘டெஸ்ட் கிரிக்கெட் உயிரோட்டத்துடன் இருக்க வேண்டும் என்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கட்டாயம் நடத்தப்பட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்ளூர், வெளியூர் அடிப்படையில் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* ஆக்கி இந்தியா அமைப்பு தான் நடத்தும் ஆக்கி இந்தியா லீக் மற்றும் சர்வதேச ஆக்கி போட்டிகளின் போது இலவசமாக வழங்கும் டிக்கெட் எவ்வளவு? அது யார்-யாருக்கு வழங்கப்படுகிறது. ஸ்பான்சர் நிறுவனங்களிடம் பெறும் தொகை தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திரா அகர்வால் கேட்டு இருந்தார். இது குறித்த தகவலை ஆக்கி இந்தியா அமைப்பு அளிக்க மறுத்து விட்டது. இந்த நிலையில் அவர் மத்திய தகவல் அறியும் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம் ஸ்பான்சர் பெறுதல் மற்றும் அன்பளிப்பு டிக்கெட் வழங்குதல் குறித்த தகவலை ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. வெளிப்படையான நிர்வாகம் நடந்தால் தான் ஊழலை தடுக்க முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூரு எப்.சி. அணிக்காக விளையாடி வரும் இந்திய வீரர் சுனில் சேத்ரி கடந்த 5-ந் தேதி நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் அவர் 2 வாரம் விளையாட முடியாது என்று இந்திய கால்பந்து அணியின் பிசியோதெரபிஸ்ட் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அவரை ஓய்வு எடுக்க அணி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் வருகிற 17-ந் தேதி அம்மானில் நடைபெறும் ஜோர்டானுக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் சுனில் சேத்ரி விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ‘விராட் கோலியை அளவுக்கு அதிகமாக தூக்கி வைத்து பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை விராட் கோலியிடம் சிறப்பு வாய்ந்த பேட்டிங் திறமை இருப்பதாக தெரியவில்லை. இந்திய வீரர்களை காட்டிலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் பேட்டிங்கையே நான் மிகவும் ரசித்து பார்க்கிறேன்’ என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் கடும் கோபத்துக்கு ஆளான விராட்கோலி அந்த ரசிகருக்கு பதிலடியாக தனது பெயரில் உருவாக்கப்பட்ட செயலியில் வீடியோ பதிவை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில், ‘இந்த கருத்தை கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது வாழலாம். மற்ற நாடுகளை நேசித்துக் கொண்டு ஏன் அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும். மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இந்தியாவில் இருக்க வேண்டுமா? இவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.’ என்று கடுமையாக சாடியிருந்தார். விராட்கோலியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் முன்னாள் உலக செஸ் சாம்பியன் விசுவநாதன் ஆனந்த், விராட்கோலியின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘கட்டுப்பாட்டை இழந்து விராட்கோலி அப்படி பேசியிருப்பார் என்று நினைக்கிறேன். உணர்ச்சி பெருக்கில் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கண்டியில் நாளை தொடங்குகிறது. காலே டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சன்டிமால் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் கேப்டனாக அணியை வழிநடத்துவார். இலங்கை அணியில் புதுமுக வீரர் சாரித் அசாலன்கா சேர்க்கப்பட்டுள்ளார்.

* 12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை-உ.பி.யோத்தா அணியும் மோதுகின்றன.