துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 14 Nov 2018 9:15 PM GMT (Updated: 14 Nov 2018 7:08 PM GMT)

போலந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.


* இந்திய கிரிக்கெட் அணி அடுத்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருப்பது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய அணியில் தற்போது ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாதது இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோர் இல்லாதது போன்றதாகும். இது நமக்கு சாதகமான அம்சமாகும். ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு இதுவே சரியான வாய்ப்பாகும்’ என்று தெரிவித்தார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் தனது மனைவிக்கு மாதாந்திர குடும்ப செலவுக்கு அளித்த காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விட்டது. இதைத்தொடர்ந்து முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் மேற்கு வங்காளத்தில் உள்ள அலிபோரே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு முகமது ஜாபர் பார்விஜ், முகமது ஷமி கோர்ட்டில் ஆஜராகும் படி உத்தரவிட்டு இருந்தார். ஆனால் நேற்று முகமது ஷமி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான வக்கீல் முகமது ஷமிக்கு பதிலாக அவரது வக்கீல் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட்டு முகமது ஷமி ஜனவரி 15-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அவர் நேரில் ஆஜராக தவறினால், பிடிவாரண்டு பிறப்பிக்க நேரிடும் என்றும் மாஜிஸ்திரேட்டு எச்சரித்தார்.

* உத்தரபிரதேசத்தை சேர்ந்த 18 வயதான தடகள வீரர் பாலிந்தர் சவுத்ரி கடந்த ஆண்டு (2017) பாங்காக்கில் நடந்த ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் கடந்த ஜூலை மாதம் நடந்த உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார். பாலிந்தர் சவுத்ரி டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பயிற்சி முடிந்து விடுதிக்கு திரும்பிய பாலிந்தர் சவுத்ரி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்திய விளையாட்டு ஆணையமும் துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. பணம் விஷயமாக அவர் தனது தந்தையுடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு தூக்கு முடிவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி வீடியோ பதிவு ஒன்றில், ‘காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம். இந்தியாவுக்கும் கொடுக்க வேண்டாம். காஷ்மீர் தனிநாடாக இருக்கட்டும். அப்படியாவது அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழட்டும்’ என்று கூறியிருந்தார். இதனால் சர்ச்சை கிளம்பியது. அவரது நாட்டிலேயே அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து அப்ரிடி பல்டி அடித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் ‘காஷ்மீர் விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை. அங்கு நடக்கும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் நான் உள்பட அனைத்து பாகிஸ்தானியர்களின் ஆதரவு உண்டு. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது’ என்று கூறியுள்ளார்.

* நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் 3 சுற்றுகள் டிரா ஆனது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த 4-வது சுற்றும் 34-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.9.4 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 11-வது சீசனில் ஆடவில்லை. இந்த நிலையில் அவரை தங்கள் அணிக்கான ஒப்பந்தத்தில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் விடுவித்துள்ளது. இதன் மூலம் 2019-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரிலும் 28 வயதான ஸ்டார்க் விளையாடமாட்டார் என்பது தெரிகிறது. இதற்கிடையே ஏலத்திற்கு முன்பாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்தின் மார்க்வுட் மற்றும் உள்ளூர் முதல்தரபோட்டி வீரர்கள் கனிஷ்க் சேத், ஷிட்டிஸ் ஷர்மா ஆகிய மூன்று பேரை அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. கேப்டன் டோனி உள்பட மற்ற வீரர்கள் அணியில் நீடிக்கிறார்கள்.

* போலந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை 29 வயதான அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். போட்டிக்கு ஏற்ப தனது உடல்நிலை ஒத்துழைக்காததால் 13 ஆண்டுகால சர்வதேச டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார். முன்னாள் 2-ம் நிலை வீராங்கனையான ராட்வன்ஸ்கா, பெண்கள் சாம்பியன்ஷிப் உள்பட 20 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார்.


Next Story