பார்முலா1 கார் பந்தயம் நடத்த இந்தியா உகந்த நாடு இல்லையா? - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு


பார்முலா1 கார் பந்தயம் நடத்த இந்தியா உகந்த நாடு இல்லையா? - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 Nov 2018 10:45 PM GMT (Updated: 16 Nov 2018 7:33 PM GMT)

பார்முலா1 பந்தயம் நடத்த இந்தியா உகந்த நாடு இல்லை என்று நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

லண்டன்,

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார் பந்தயத்தில் 5 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) தனது போட்டி அனுபவம் குறித்து டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் பார்முலா1 பந்தயத்தை நடத்த இந்தியா உகந்த நாடு இல்லை என்பது போல் கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ‘இந்தியா கொஞ்சம் விசித்திரமான நாடு. அது ஒரு ஏழை நாடாக இருந்தாலும், அங்கேயும் ஒரு பிரமாண்டமான பார்முலா1 கார் பந்தய ஓடுதளம் இருப்பது பெரிய முரண்பாடாக தெரிகிறது. அங்கு போட்டியில் பங்கேற்ற போது எனக்கே தர்மசங்கடமாக தான் இருந்தது’ என்று குறிப்பிட்டார்.

ஹாமில்டனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஹாமில்டனுக்கு பொது அறிவு இல்லை என்று சில ரசிகர்கள் வசைபாடினர். இந்திய ரசிகர்களின் தாறுமாறான எதிர்ப்பால் கலக்கம் அடைந்த ஹாமில்டன் தனது கருத்து குறித்து டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து ஹாமில்டன் தனது பதிவில், “எனது கருத்தால் சிலர் அதிருப்தி அடைந்து இருப்பதாக அறிகிறேன். உலகத்தில் உள்ள மிகவும் அழகான இடங்களில் இந்தியாவும் ஒன்றாகும். அதன் கலாசாரம் வியப்பானது. இந்தியாவில் நான் செலவிட்ட நேரங்கள் அற்புதமானது. இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வந்தாலும், அங்கு ஏழ்மையும் அதிகம் இருக்கிறது. வீடுகள் இல்லாத மக்கள் அதிகம் இருக்கும் நிலையில் அங்கு ஒரு கிராண்ட்பிரி பந்தயத்தில் பிரமாண்டமான அரங்கில் நுழைந்தது எனக்கு வித்தியாசமாகவே தோன்றியது.

தற்போது பயன்பாட்டில் இல்லாத ஒரு ஓடுதளத்துக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்கள். அந்த பணத்தை பள்ளிகளுக்கோ, வீடு இல்லாத மக்களுக்கோ செலவு செய்து இருக்கலாம். நான் அங்கு போட்டியில் கலந்து கொண்ட போது டிக்கெட் விலை அதிகம் என்பதால் பந்தயத்தை பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் அங்கு சில அற்புதமான ரசிகர்களை சந்தித்தேன்’ என்று கூறியுள்ளார்.

பார்முலா1 கார் பந்தயத்தின் ஒரு சுற்று போட்டியை நடத்த அங்கீகாரம் பெற்று இந்திய கிராண்ட்பிரி போட்டி டெல்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புத் சர்வதேச ஓடுதளத்தில் 2011, 2012, 2013 ஆகிய 3 ஆண்டுகள் நடந்தது. அதன் பிறகு சில நடைமுறை சிக்கல் காரணமாக இந்தியாவில் பார்முலா1 கார்பந்தயம் ரத்து செய்யப்பட்டு விட்டது.


Next Story