பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
1990-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற மேற்கு ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் லோதார் மாத்துஸ் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டோனி ஓய்வின் போது தனது 3 வயது மகள் ஸிவாவுடன் அதிக நேரத்தை செலவிடுவது வாடிக்கையாகும். அவர் தனது மகளுடன் எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். டோனிக்கு அவரது மகள் ஸிவா நடனம் சொல்லி கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஸிவா நடன அசைவுகளை செய்து காட்ட அதனை பார்த்தபடி டோனி நடனம் ஆடுவது போல் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ காட்சியை வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானவர்கள் பார்த்து உள்ளனர்.


* 1990-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற மேற்கு ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் லோதார் மாத்துஸ் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். 57 வயதான லோதார் மாத்துஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன் வருகிற 4-ந் தேதி கொச்சியிலும், 6-ந் தேதி மும்பையிலும் நடைபெறும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகளை நேரில் பார்க்கிறார்.

* 6-வது புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் இன்று நடைபெறும் 94-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி) அணியும், மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணியும் மோதுகின்றன.

* 10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின. பின் பாதியில் அபாரமாக செயல்பட்ட மும்பை அணி 4-2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி 5-வது வெற்றி கண்டது. 10-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். ஒரு வெற்றி கூட பெறாத அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது. கொச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

* இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் ரமேஷ் பவாரின் பதவி காலம் கடந்த 30-ந் தேதி முடிவடைந்தது. சீனியர் வீராங்கனை மிதாலி ராஜ், ரமேஷ் பவார் இடையிலான பனிப்போர் வெளிப்படையாக வெடித்ததால் அவருக்கு மீண்டும் பயிற்சியாளர் பதவி கிடைப்பது கடினம் என்று செய்திகள் வெளியானது. இதற்கிடையில் இந்திய 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா ஆகியோர் ரமேஷ் பவாரை 2021-ம் ஆண்டு வரை பயிற்சியாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதேநேரத்தில் ரமேஷ்பவாருக்கு பயிற்சியாளர் பதவி வழங்கக்கூடாது என்று எக்தா பிஸ்த், மான்சி ஜோஷி ஆகியோர் மிதாலி ராஜூடன் இணைந்து குரல் எழுப்பி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் இரு கோஷ்டியாக செயல்படுவது உறுதியாகி இருக்கிறது.

* 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில் நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் நார்தர்ன் டெரிடரி அணியை எளிதில் வீழ்த்தியது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ அணியின் கேப்டனான 18 வயது ஆலிவர் டேவிஸ் 115 பந்துகளில் 17 சிக்சருடன் 207 ரன்கள் குவித்தார். 74 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்த அவர் மேலும் 39 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். 40-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் ஜேம்ஸ் வீசிய ஒரு ஓவரில் ஆலிவர் டேவிஸ் 6 பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்சருக்கு தூக்கி சாதனை படைத்தார்.

* 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 18-ந் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. முன்பு இந்த ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் இந்த ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறார்கள். 8 அணிகளும் மொத்தம் ரூ.145.25 கோடியை வீரர்கள் ஏலத்துக்காக செலவிட முடியும்.

* 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் முறைப்படியாக விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியை நடத்த ஆர்வம் தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பம் செய்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.