ரூ.25 லட்சம் பரிசுத்தொகைக்கான மாரத்தான் பந்தயம் சென்னையில் நடக்கிறது


ரூ.25 லட்சம் பரிசுத்தொகைக்கான மாரத்தான் பந்தயம் சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 5 Dec 2018 9:30 PM GMT (Updated: 5 Dec 2018 8:41 PM GMT)

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 7–வது சென்னை மாரத்தான் பந்தயம் அடுத்த மாதம் (ஜனவரி) 6–ந் தேதி நடக்கிறது. இதில் 4 வகையான மாராத்தான் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), 32.186 கிலோ மீட்டர் தூர மாரத்தான் பந்தயம், அரை மாரத்தான் (21.097 கிலோ மீட்டர்) ஆகியவை நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4 மணி மற்றும் 4.30 மணிக்கு தொடங்கி வி.ஜி.பி. தங்க கடற்கரையில் முடிவடைகிறது. 10 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு தொடங்கி தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் மைதானத்தில் நிறைவடையும். இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. மாரத்தான் பந்தயத்துக்கான அதிகாரபூர்வ டி‌ஷர்ட்டை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் அறிமுகப்படுத்தினார்.


Next Story