புரோ கபடி: டெல்லியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்


புரோ கபடி: டெல்லியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்
x
தினத்தந்தி 6 Dec 2018 9:30 PM GMT (Updated: 6 Dec 2018 8:20 PM GMT)

புரோ கபடியில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, டெல்லியிடம் போராடி வீழ்ந்தது.

புதுடெல்லி,

புரோ கபடியில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, டெல்லியிடம் போராடி வீழ்ந்தது.

தமிழ் தலைவாஸ்

6–வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்–3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை யு மும்பா, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 99–வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லியுடன் கோதாவில் இறங்கியது. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் 16–11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற டெல்லி அணி அதை கடைசி வரை போராடி தக்க வைத்துக் கொண்டது. முடிவில் டெல்லி அணி 37–33 என்ற புள்ளி கணக்கில் தலைவாசை சாய்த்து 10–வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர் 14 புள்ளிகள் எடுத்தார். 17–வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 10–வது தோல்வியாகும். தொடர்ச்சியான சறுக்கலால் தலைவாஸ் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.

அரியானா தோல்வி

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 30–29 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. அரியானா அணியில் மோனு கோயட் ரைடு மூலம் 11 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லாமல் போய் விட்டது. 17–வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணிக்கு இது 4–வது வெற்றியாகும்.

இன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்–குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்–புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story