பிற விளையாட்டு

நீச்சலில் சாதிக்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய சாம்பியனின் அறிவுரை + "||" + India to achieve swimsuit Advice from the Australian Champion

நீச்சலில் சாதிக்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய சாம்பியனின் அறிவுரை

நீச்சலில் சாதிக்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய சாம்பியனின் அறிவுரை
இந்தியாவில் நீச்சலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும், போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த போதிலும், சர்வதேச அளவில் நமது சாதனை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
ஒலிம்பிக்கில் நீச்சலில் இந்தியா இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை. காமன்வெல்த் போட்டியில் கூட இதுவரை நமக்கு ஒரே ஒரு பதக்கம்தான் சொந்தமாகி இருக்கிறது. 1951-ல் தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் இதுவரை நாம் வென்றிருப்பது 10 பதக்கங்களே.

ஆனால் நீச்சலில் சர்வதேச தரத்துக்கு நமது வீரர், வீராங்கனைகளின் திறமையை பட்டை தீட்டினால், பதக்கங்களை அள்ள முடியும். சர்வதேசப் போட்டி களில் ஆண்கள், பெண்கள், கலப்பு என்று ஒவ்வொரு வகையிலும் தலா 20-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளதே காரணம்.

உதாரணத்துக்கு, இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு, ஆஸ்திரேலியா. அவர்கள் வென்ற மொத்தப் பதக்கங்கள் 198-ல் 73 பதக்கங்கள் நீச்சலில் கிடைத்தவை. இன்னொரு கணக்குப் பார்த்தால், ஆஸ்திரேலியா பெற்ற 80 தங்கப் பதக்கங்களில் 38, நீச்சல்குளத்தில் இருந்து கிடைத்தவை.

கடந்த 5 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியதற்கு முக்கியக் காரணம், நீச்சலில் அவர்களின் அசாதாரண வலுதான்.

ஸ்டெபானி ரைஸ் போன்ற சாம்பியன் வீராங்கனைகளையும், வீரர்களையும் தொடர்ந்து ஆஸ்திரேலியா உருவாக்கி வருகிறது.

சர்வதேச நீச்சலில் சரமாரியாய் சாதித்தவரான ஸ்டெபானி ரைஸ், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் மட்டும் 3 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார்.

அப்படிப்பட்ட நட்சத்திர வீராங்கனை, இந்திய நீச்சலின் இன்றைய நிலை குறித்து என்ன நினைக்கிறார்? சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஸ்டெபானி ரைஸ், இது தொடர்பாக மனம் திறந்தார்...

‘‘இந்தியா, அதன் நீச்சல் நிலையைப் பொறுத்தவரை, உச்ச நிலையில் ஒன்றிரண்டு பேர் மட்டும் சிறப்பாகச் செயல்படும் வரை உங்களால் பெரிதாகச் சாதிக்க முடியாது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் எண்ணற்ற பதக்கங்களை வெல்லும் வாய்ப்புள்ள நிலையில், உங்களுக்கு ஒரு முழுமையான அணி வேண்டும். அதாவது, தேசிய அளவில் 20 முதல் 40 சிறந்த வீரர், வீராங்கனைகள் தேவை.

அதற்கு, சிறந்த பயிற்சியாளர்கள், சிறந்த விளையாட்டு மருத்துவம், சிறந்த விளையாட்டு அறிவியல் ஆகியவற்றைக் கொண்டு நீங்கள் ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்க வேண்டும்’’ என்று கூறும் ஸ்டெபானி, சர்வதேசப் போட்டிகளில் இந்தியா நீச்சலில் பதக்கங்களை வெல்வது கடினம் அல்ல, ஆனால் அதற்கான அடிப்படை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இந்த முயற்சியில், தான் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் சொல்கிறார்...

‘‘இந்திய நீச்சலில் நான் ஈடுபடவும், அதன் வளர்ச்சிக்கு உதவவும் தயாராக உள்ளேன். ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இந்தியா இதுவரை நீச்சலில் பதக்கம் வெல்லவில்லை என்பது உண்மை. ஆனால் அது எப்போதும் நடக்காது என்று யாராலும் கூற முடியாது.’’

ஒரு வெளிநாட்டு வீராங்கனை இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லும்போது, நம் பலத்தை நாம் உணர வேண்டிய வேளை இது.