உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் சிந்து வெற்றி


உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் சிந்து வெற்றி
x
தினத்தந்தி 12 Dec 2018 10:45 PM GMT (Updated: 12 Dec 2018 7:51 PM GMT)

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டியின் தொடக்க ஆட்டத்தில், சிந்து வெற்றிபெற்றார்.

குவாங்சோவ்,

‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்தித்தார். 52 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சிந்து 24-22, 21-15 என்ற நேர்செட்டில் அகானே யமாகுச்சியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தார். சிந்து கூறுகையில், ‘லீக் சுற்றை வெற்றியுடன் தொடங்குவது முக்கியமானது. முதலாவது கேமில் கடைசி வரை பதற்றமாக இருந்தது. முதலாவது கேமை வென்றதும் 2-வது செட்டில் சிறப்பாக செயல்பட்டேன்’என்றார். சிந்து தனது 2-வது லீக்கில் நம்பர் ஒன் நட்சத்திரம் தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) இன்று மல்லுகட்டுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர் சமீர் வர்மா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜப்பானின் கென்டோ மொமோட்டோவை எதிர்கொண்டார். இதில் சமீர் வர்மா 18-21, 6-21 என்ற நேர்செட்டில் தோல்வியை தழுவினார்.



Next Story