பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி + "||" + World Badminton final round: Samir Verma semi-final progress - Sindhu on hat trick

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி
உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா 2-வது வெற்றியை பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.
குவாங்சோவ்,

‘டாப்-8’ வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடந்த தனது கடைசி லீக்கில் அமெரிக்க வீராங்கனை ஜாங் பீவெனை எதிர்கொண்டார். 35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-9, 21-15 என்ற நேர்செட்டில் ஜாங் பீவெனை எளிதில் தோற்கடித்தார். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்த (ஹாட்ரிக்) பி.வி.சிந்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.


பின்னர் சிந்து கூறுகையில், ‘தொடக்கத்தில் 2-6 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்தேன். அதில் இருந்து மீண்டு வந்து முன்னிலை பெற்றது சிறப்பானதாகும். இந்தியன் ஓபன் இறுதிப்போட்டி உள்பட சில ஆட்டங்களில் ஜாங் பீவெனுடன் விளையாடி இருக்கிறேன். தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே உத்வேகத்துடன் அரைஇறுதியிலும் சிறப்பாக விளையாடுவேன்’ என்றார்.

‘ஏ’ பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங் (சீன தைபே)-நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்) மோதினார்கள். இதில் யமாகுச்சி முதல் செட்டை வென்று (21-17), 2-வது செட்டில் சற்று பின் தங்கி (11-12) இருந்த போது தாய் ஜூ யிங் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் 2-வது வெற்றி கண்ட யமாகுச்சி தனது பிரிவில் 2-வது இடம் பெற்று அரைஇறுதியை உறுதி செய்தார்.

சிந்து தனது அரைஇறுதியில் தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை இன்று சந்திக்கிறார். ராட்சனோக்குடன் ஏற்கனவே 7 முறை மோதியுள்ள சிந்து அதில் 3-ல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்த இந்திய வீரர் சமீர் வர்மா, கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்து வீரர் கன்டாபோன் வாங்சரோனை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் சமீர் வர்மா 21-9, 21-18 என்ற நேர்செட்டில் வாங்சரோனை விரட்டியடித்து 2-வது வெற்றியை பெற்றார். இதன் மூலம் தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்ற சமீர் வர்மா அரைஇறுதியை எட்டினார்.

கவுரவமிக்க இந்த போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்ற சமீர் வர்மா, முதல் தொடரிலேயே அரைஇறுதிக்கு வந்து அசத்தியுள்ளார். அரைஇறுதியில், 2-ம் நிலை வீரரான சீனாவின் ஷி யுகியுடன் இன்று மல்லுகட்டுகிறார்.