பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
‘இந்தியா– ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துபவர் புஜாரா தான்.

தனபால் கணேஷின் ஒப்பந்தம் நீட்டிப்பு

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி. அணியில் தனபால் கணேஷ் இடம் பெற்றுள்ளார். ஆனால் கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக 5–வது சீசனில் இதுவரை எந்த போட்டியிலும் ஆடவில்லை. இந்த நிலையில் புத்தாண்டு பரிசாக சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம், அவரது ஒப்பந்தத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி 2022–ம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்து சென்னை அணியில் நீடிப்பார். 27 வயதான தனபால் கணேஷ் கடந்த சீசனில் 17 ஆட்டங்களில் விளையாடி 2 கோல் அடித்ததுடன், அணி பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

புஜாராவுக்கு, ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்

ஆஸதிரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியா– ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துபவர் புஜாரா தான். ஏனெனில் பந்து வீச்சை பார்க்கும் போது, இரு அணிக்கும் வலுவாகவே உள்ளது. பெர்த் டெஸ்டில் முதல் பகுதி மற்றும் மெல்போர்னில் மயங்க் அகர்வால் தவிர அனைத்து தொடக்க ஆட்டக்காரர்களும் தடுமாறத் தான் செய்கிறார்கள். எனவே 3–வது வரிசையில் ஆடும் புஜாரா தான் வெகுவாக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார் என்பதே முக்கியமான ஒன்று. அவர் விக்கெட்டை சீக்கிரமாக இழப்பதில்லை. அத்துடன் நிறைய நேரம் எடுத்துக் கொண்டு ஆடுகிறார். நாதன் லயனின் பந்து வீச்சை திறம்பட சமாளித்தார். அதனால் புஜாராவின் பங்களிப்பை புறந்தள்ளி விட முடியாது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு பிரமாதமாக உள்ளது. எந்த ஒரு பேட்ஸ்மேனை கேட்டாலும், தாங்கள் சந்திக்கும் அபாயகரமான பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர் என்று சொல்வார்கள்’ என்றார்.

ஆஸ்திரேலிய ஓபன்: டெல்போட்ரோ விலகல்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 14–ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து அர்ஜென்டினா முன்னணி வீரர் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ விலகியுள்ளார். வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் வேறு வழியின்றி ஆஸ்திரேலிய ஓபனை தவற விடுவதாக 30 வயதான டெல் போட்ரோ கூறியுள்ளார்.