தேசிய சீனியர் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி


தேசிய சீனியர் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 10:34 PM GMT)

67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை, 

67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. போட்டியை சர்வதேச கைப்பந்து சம்மேளன செயல் துணைத்தலைவர் ஈசா ஹம்சா தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன், பொதுச் செயலாளர் ராம் அவதார்சிங் ஜாக்கர், வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். கல்வி குழும இயக்குனர் (விளையாட்டு) வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருகிற 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்றுள்ளன. இதன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ‘ஏ’, ‘பி’ பிரிவு ஆட்டம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும், பெண்களுக்கான ‘சி’, ‘டி’, ‘இ’, ‘எப்’ பிரிவு ஆட்டங்கள் மேடவாக்கத்தில் உள்ள வேலம்மாள் பள்ளி மைதானத்திலும், ஆண்களுக்கான ‘சி’, ‘டி’, ‘இ’, ‘எப்’ பிரிவு ஆட்டங்கள் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக் வளாகத்திலும் நடைபெறுகிறது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி, பஞ்சாப்பை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் தமிழக அணி 27-25, 25-21, 26-24 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ரெயில்வே அணி 25-13, 25-13, 25-7 என்ற நேர் செட் கணக்கில் அரியானாவை சாய்த்தது.

Next Story