துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 16 Jan 2019 10:30 PM GMT (Updated: 16 Jan 2019 7:01 PM GMT)

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.


கோலிக்கு ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் பாராட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘தெண்டுல்கர் போல் விராட்கோலியும் சர்தேச கிரிக்கெட்டில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். எல்லா கோணங்களிலும் விராட்கோலி ஆடும் ஷாட்கள் நம்பமுடியாத வகையில் இருக்கிறது. விராட்கோலி, டோனி, ரோகித் சர்மா ஆகிய 3 சிறந்த ஒருநாள் போட்டி வீரர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடுகிறோம். நாங்கள் தோற்றது வருத்தம் அளித்தாலும் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடும் எங்கள் அணி வீரர்கள் இந்த போட்டியில் இருந்து நல்ல அனுபவத்தை பெறுவார்கள்’ என்று தெரிவித்தார்.

டோனிக்கு நெருக்கடி அளிக்கக்கூடாது - கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனி அணிக்கு மதிப்பிட முடியாத வீரர். அவர் நாளுக்கு நாள் இளமையாக மாறிக் கொண்டிருக்கவில்லை என்பதை அவரை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிரணி பேட்ஸ்மேன் என்ன மாதிரி அடுத்த பந்தை விளையாட முயற்சிப்பார் என்பதை கணிக்கும் திறன் படைத்த அவர் அது குறித்து பவுலர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடியவர். டோனிக்கு நெருக்கடி கொடுக்காமல் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டோனி ஆடிய விதத்தை முன்னாள் கேப்டன் தெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார்.


மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் சாய்னா வெற்றி


மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 14-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனை ஜாய் சுயானை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.


தேசிய ஆக்கி: தமிழ்நாடு-எல்லை பாதுகாப்பு படை இன்று மோதல்

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் மராட்டியம்-சாய் (காலை 7.30 மணி), தமிழகம்-எல்லை பாதுகாப்பு படை (காலை 9.30 மணி), மத்திய தலைமை செயலகம்-எப்.சி.ஐ. (காலை 11.30 மணி), பெங்களூரு-பாட்டியாலா (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன.


ரஞ்சி கிரிக்கெட்: குஜராத் அணிக்கு 195 ரன்கள் இலக்கு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேரளா-குஜராத் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் வயநாட்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய கேரளா அணி முதல் இன்னிங்சில் 185 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னில் ஆட்டம் இழந்தது. 23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கேரள அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 171 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி 2-வது இன்னிங்சை ஆடுகிறது.

Next Story