பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.

* 11-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி சென்னை ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. மொத்தம் 10 சுற்று கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜார்ஜியா வீரர் பாய்சாட்ஸி லுகா, நடப்பு சாம்பியனான இந்தியாவின் லட்சுமணனை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஜி.ஆகாஷ், அமெரிக்க வீரர் ஜியாட்டினோவ் ராசெட்டை 46-வது நகர்த்தலில் தோற்கடித்தார். 4 சுற்று முடிவில் ஆகாஷ், லுகா, இந்தியாவின் கிரிஷ் கவுசிக் உள்பட 9 வீரர்கள் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்த ஒரு பேட்டியில், ‘என்னை பொறுத்தவரை, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கோலி ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர் தான். ஆனால் அவரது அர்ப்பணிப்பு குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. தனது தேசத்திற்காக வெற்றி தேடித்தர வேண்டும் என்ற அவரது வேட்கைக்கு நாம் மதிப்பு கொடுத்தாக வேண்டும்’ என்று கூறியுள்ளார். சர்ச்சையில் சிக்கியுள்ள ஹர்திக் பாண்ட்யா, உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டியது அவசியம் என்றும் கிளார்க் கூறியுள்ளார்.

* ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு எத்தகைய ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். ஆச்சரியம் அளிக்கும் வகையில், தனது அணிக்கு கேப்டனாக மேக்ஸ்வெல்லை தேர்வு செய்திருக்கிறார். பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் சிக்கிய ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னரையும் அணியில் சேர்த்துள்ளார்.

* மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது. இதில் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை வீழ்த்திய ஸ்பெயினின் கரோலினா மரின், பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். இதில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் 9-21, 20-22 என்ற நேர் செட்டில் தோல்வியை தழுவினார்.

* இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரும், பரோடா ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான 46 வயதான ஜாக்கப் மார்ட்டின், விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் வதோதரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் ரூ.3 லட்சமும் வழங்கியுள்ளது. ஏற்கனவே மருத்துவ செலவு ரூ.11 லட்சத்தை தாண்டி விட்ட நிலையில் கிரிக்கெட்டை சேர்ந்தவர்கள் நிதி உதவி வழங்கி உதவும்படி அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.