மும்பை மாரத்தானில் இந்திய அளவில் முதலிடம்: சுதா சிங், நிதேந்திர சிங் உலக தடகள போட்டிக்கு தகுதி


மும்பை மாரத்தானில் இந்திய அளவில் முதலிடம்: சுதா சிங், நிதேந்திர சிங் உலக தடகள போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 20 Jan 2019 10:15 PM GMT (Updated: 20 Jan 2019 9:53 PM GMT)

மும்பை மாரத்தானில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து, சுதா சிங், நிதேந்திர சிங் ஆகியோர் உலக தடகள போட்டிக்கு தகுதிபெற்றனர்.

மும்பை,

மும்பை மாரத்தான் ஓட்டப்பந்தயம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் எத்தியோப்பியா வீராங்கனை ஒர்க்னேஷ் அலெமு 2 மணி 25 நிமிடம் 45 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்தார். அவருக்கு ரூ.32 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய முன்னணி வீராங்கனை சுதா சிங் 2 மணி 34 நிமிடம் 56 வினாடிகளில் இலக்கை அடைந்து ஒட்டுமொத்தத்தில் 8-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் பெற்றார். தனிப்பட்ட முறையில் இது அவரது சிறந்த செயல்பாடாகும். இதன் மூலம் டோகாவில் செப்டம்பர் மாதம் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு சுதாசிங் தகுதி பெற்று இருக்கிறார்.

ஆண்கள் பிரிவில் கென்யா வீரர் காஸ்மாஸ் லாகட் முதலிடம் (2 மணி 9 நிமிடம் 15 வினாடி) பிடித்தார். இந்திய அளவில் முதலாவதாக வந்த நிதேந்திர சிங் ரவாத் (2 மணி 15 நிமிடம் 52 வினாடி) உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார்.


Next Story