பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thuligal in sports news

துளிகள்

துளிகள்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
* மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று மவுன்ட் மாங்கானுவில் நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியில் பேட்டிங்கில் மந்தனா 105 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 81 ரன்னும் குவித்தனர். பந்து வீச்சில் பூனம் யாதவ், எக்தா பிஸ்த், தீப்தி ஷர்மா ஆகியோர் கலக்கினார்கள். சட்டர்த்வெயிட் தலைமையிலான நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சோபிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் வென்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய அணி வெற்றிக்கு தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தொடரை இழக்காமல் இருக்க நியூசிலாந்து அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.


* உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் (செர்பியா) 10,995 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2-வது இடத்தில் தொடருகிறார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும், அர்ஜென்டினா வீரர் ஜூவன் மார்ட்டின் டெல்போட்ரோ ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும், ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்ட சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3 இடம் சரிந்து 6-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி 2 இடம் முன்னேறி 7-வது இடத்தையும், ஆஸ்திரியா வீரர் டோமினிக் திம் 8-வது இடத்தையும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ஒரு இடம் ஏற்றம் கண்டு 9-வது இடத்தையும், குரோஷியா வீரர் மரின் சிலிச் 3 இடம் சரிந்து 10-வது இடத்தையும் பிடித்தனர். இந்திய வீரர் பிரஜ்னேஷ் ஞானேஸ்வரன் 7 இடங்கள் முன்னேறி 102-வது இடத்தை பிடித்துள்ளார். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 3 இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தையும், முதல் இடத்தில் இருந்த ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 2 இடம் சரிந்து 3-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும், செக் குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா 3 இடம் முன்னேறி 5-வது இடத்தையும், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4 இடம் சரிந்து 6-வது இடத்தையும் பெற்றுள்ளனர். உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 7-வது இடத்தில் நீடிக்கிறார். நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 6 இடம் சரிந்து 9-வது இடத்தையும், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தையும் பிடித்து இருக்கிறார்கள். இந்திய வீராங்கனை அங்கிதா 35 இடங்கள் முன்னேறி 168-வது இடத்தை பெற்றுள்ளார்.

* பெண்கள் குறித்து தவறாக பேசி சர்ச்சையில் சிக்கி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையை சந்தித்து வரும் ஹர்திக் பாண்ட்யா குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்ட்யா அதில் இருந்து சரியான ஊக்கம் பெற்று சரியான பாதையில் பயணித்து சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்து சாதிப்பார் என்று நம்புகிறேன். கிரிக்கெட் வீரருக்கு ஆட்டத்தை விட பெரிது எதுவும் கிடையாது. உங்களது எல்லா சக்தியையும் ஆட்டத்துக்கு அளிப்பதுடன், அதனை மதித்து செயல்பட்டால் அது திரும்ப உங்களுக்கு உரிய மரியாதையை அளிக்கும். ஹர்திக் பாண்ட்யா இடம் பெறுவது அணிக்கு நல்லதாகும். அது அணியின் சமச்சீர் தன்மையை வலுப்படுத்தும். அவர் இந்த ஆட்டத்தில் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்தார்’ என்றார்.

* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 63-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. பெங்களூருவில் நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...