துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:00 PM GMT (Updated: 31 Jan 2019 8:51 PM GMT)

உலக பேட்மிண்டன் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

* பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் சரிந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 9-வது இடத்தில் நீடிக்கிறார். சீன தைபே வீராங்கனை தாய் சு யிங் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா முதல் இடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

* இந்தியா-ஸ்பெயின் பெண்கள் ஆக்கி அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் 4-வது மற்றும் கடைசி போட்டி முர்சியாவில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீராங்கனைகள் தீப்ஸ் கிரேஸ் எக்கா பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 8-வது நிமிடத்திலும், நவ்னீத் கவுர் 26-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின்பாதியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட ஸ்பெயின் அணி அடுத்தடுத்து 2 கோல்கள் திருப்பியது. ஸ்பெயின் வீராங்கனைகள் லூசியா ஜிமென்ஸ் 35-வது நிமிடத்திலும், கிளாரா பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன் பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த போட்டி தொடரில் இந்தியா, ஸ்பெயின் அணிகள் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.


* இந்தியா ‘ஏ’-இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 35 ஓவர்களில் 121 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சித்தேஷ் லாத் 36 ரன்கள் எடுத்தார். லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 30.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து லயன்ஸ் வீரர் பென் டக்கெட் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த போட்டி தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தனதாக்கியது.

* இலங்கை கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கான்பெர்ராவில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

* பாகிஸ்தானுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் கராச்சியில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. டோட்டின் (90 ரன்), செடியன் நேசன் (50 ரன்) அரைசதம் விளாசினர். அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 18 ஓவர்களில் 89 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

* பெண்களுக்கான சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ரவுண்ட் ராபின் செஸ் போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் நேற்று 5-வது மற்றும் 6-வது சுற்று பந்தயங்கள் நடந்தன. இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் 5-வது சுற்றில் வர்ஷினியையும் (இந்தியா) 6-வது சுற்றில் பிராங்கோ வலென்சியாவையும் (கொலம்பியா) தோற்கடித்து அசத்தினார். 6-வது சுற்று முடிவில் திவ்யா தேஷ்முக் 4.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

* இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது 24 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து தடுமாறியது.

* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது. இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் சந்திக்கின்றன.

Next Story