புரோ கைப்பந்து லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கியது, கொச்சி அணி


புரோ கைப்பந்து லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கியது, கொச்சி அணி
x
தினத்தந்தி 2 Feb 2019 10:00 PM GMT (Updated: 2 Feb 2019 10:00 PM GMT)

புரோ கைப்பந்து லீக் போட்டியை கொச்சி அணி வெற்றியுடன் தொடங்கியது.

கொச்சி,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு தொடங்கியது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். லீக் ஆட்டங்கள் தொடர்ந்து வருகிற 13-ந் தேதி கொச்சியிலும், கடைசி 3 லீக் ஆட்டம் மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டி ஆகியவை வருகிற 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது.

தொடக்க நாளான நேற்று இரவு கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ்-யு மும்பா வாலி (மும்பை) அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் களம் கண்ட கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி 15-11, 15-13, 15-8, 15-10, 5-15 என்ற செட் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. இந்த வெற்றியின் மூலம் கொச்சி அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.

2-வது நாளான இன்று இரவு 7 மணிக்கு கொச்சியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஷெல்டன் மோசஸ் தலைமையிலான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story