தேசிய பேட்மிண்டன்: சிந்துவை வீழ்த்தினார் சாய்னா


தேசிய பேட்மிண்டன்: சிந்துவை வீழ்த்தினார் சாய்னா
x
தினத்தந்தி 16 Feb 2019 9:45 PM GMT (Updated: 16 Feb 2019 8:58 PM GMT)

83–வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது.

கவுகாத்தி, 

83–வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து மோதினர். 44 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் நடப்பு சாம்பியனான சாய்னா 21–18, 21–15 என்ற நேர் செட்டில் பி.வி.சிந்துவை சாய்த்து பட்டத்தை தட்டிச்சென்றார். இரண்டு செட்டிலும் தொடக்கத்தில் பி.வி.சிந்து 4–2, 5–3 என்ற வீதம் முன்னிலை பெற்றிந்தாலும் அதன் பிறகு சாய்னாவின் அதிரடியான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்து போய் விட்டார். தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை சாய்னா ருசிப்பது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2006, 2007, 2018–ம் ஆண்டுகளிலும் இந்த கோப்பையை வென்று இருந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிசுற்றில் சவுரப் வர்மா 21–18, 21–13 என்ற நேர் செட்டில் 17 வயதான லக்‌ஷயா சென்னை தோற்கடித்து 3–வது முறையாக வாகை சூடினார். 26 வயதான சவுரப் வர்மா 2011, 2017–ம் ஆண்டுகளிலும் இந்த பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.

சாம்பியன்கள் சாய்னா, சவுரப் வர்மா தலா ரூ.3.25 லட்சமும், 2–வது இடம் பிடித்த சிந்து, லக்‌ஷயாசென் தலா ரூ.1.70 லட்சமும் பரிசாக பெற்றனர்.


Next Story