மாற்று திறனாளிகளுக்கான மாநில போட்டிகள்: கபடியில் தூத்துக்குடி அணி ‘சாம்பியன்’


மாற்று திறனாளிகளுக்கான மாநில போட்டிகள்: கபடியில் தூத்துக்குடி அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 2 March 2019 10:15 PM GMT (Updated: 2 March 2019 7:25 PM GMT)

மாற்று திறனாளிகளுக்கான மாநில போட்டிகளின், கபடியில் தூத்துக்குடி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் பார்வையற்றவர்களுக்கான கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தையும், தஞ்சாவூர் அணி 2-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் விழுப்புரம் அணி முதலிடத்தையும், கிருஷ்ணகிரி அணி 2-வது இடத்தையும் பிடித்தன. உடல் ஊனமுற்றோருக்கான பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் திருப்பூர் அணி முதலிடத்தையும், ஈரோடு அணி 2-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் சிவகங்கை அணி முதலிடத்தையும், திண்டுக்கல் அணி 2-வது இடத்தையும் பெற்றன. உடல் ஊனமுற்றவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணி முதலிடத்தையும், திருவள்ளூர் அணி 2-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் திருப்பூர் அணி முதலிடத்தையும், மதுரை அணி 2-வது இடத்தையும் தனதாக்கின. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான எறிபந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் மதுரை அணி முதலிடத்தையும், விருதுநகர் அணி 2-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் நெல்லை அணி முதலிடத்தையும், திண்டுக்கல் அணி 2-வது இடத்தையும் சொந்தமாக்கின.

காதுகேளாதோருக்கான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் சிவகங்கை அணி முதலிடத்தையும், கன்னியாகுமரி அணி 2-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி அணி முதலிடத்தையும், நெல்லை அணி 2-வது இடத்தையும் பிடித்தன. தடகள போட்டியில் காதுகேளாதோருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் காயத்ரி (திருவண்ணாமலை), மாரி செல்வி (விருதுநகர்), சிவசுந்தரி (நெல்லை) முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். பரிசளிப்பு விழாவில் எஸ்.டி.ஏ.டி. மண்டல முதுநிலை மேலாளர் முருகன், மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.

Next Story