துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 5 March 2019 9:00 PM GMT (Updated: 5 March 2019 8:48 PM GMT)

‘தல’ என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய வெள்ளை நிற பனியன் அணிந்து இருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி டோனியை நோக்கி ஓடினார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணியின் ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 10 ரன்னை எட்டிய போது 2 ஆயிரம் ரன்களை கடந்தார். 30 வயதான ரவீந்திர ஜடேஜா 149 ஒருநாள் போட்டியில் ஆடி 2,011 ரன்கள் எடுத்து இருப்பதுடன், 172 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுக்கு மேல் ஒரு சேர எடுத்த 3–வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த வகையில் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் தெண்டுல்கர் 18,426 ரன்னும், 154 விக்கெட்டும், கபில்தேவ் 3,783 ரன்னும், 254 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

* உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் அஜர்பைஜானில் வருகிற 14–ந் தேதி முதல் 17–ந் தேதி வரையும், கத்தாரில் வருகிற 20–ந் தேதி முதல் 23–ந் தேதி வரையும் நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான இந்த போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் பங்கேற்க இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனம் சார்பில் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (சாய்) அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. தீபா கர்மாகர் தனது தனிப்பட்ட பயிற்சியாளர்களுடன் இந்த 2 உலக கோப்பை போட்டியிலும் கலந்து கொள்ள சாய் நேற்று அனுமதி அளித்து இருக்கிறது.

* டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து இழிவாக பேசிய பேச்சு சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து அவர்கள் இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது. பின்னர் அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டு தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் நீதிபதி ஜெயின் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இதுவரை நானாக முன்வந்து இந்த விசாரணையை நடத்த முடிவு எதுவும் எடுக்கவில்லை. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி இந்த வழக்கை என்னிடம் பரிந்துரை செய்த பிறகு நான் விசாரிப்பேன்’ என்று தெரிவித்தார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பீல்டிங் செய்ய களம் இறங்கிய போது ‘தல’ என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய வெள்ளை நிற பணியன் அணிந்து இருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி டோனியை நோக்கி ஓடினார். டோனியும் அவரிடம் சிக்காமல் இருக்க மைதானத்தில் சிறிது நேரம் அங்கும், இங்கும் ஓடினார். ஆனால் விடாமல் துரத்திய அந்த ரசிகர் டோனியின் காலை தொட்டு வணங்கியதுடன், அவரை கட்டி அணைத்தார். அதன் பிறகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர்கள் அவரை வெளியில் அனுப்பி வைத்தனர்.


Next Story