ஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் சிக்கல்


ஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் சிக்கல்
x
தினத்தந்தி 5 March 2019 9:45 PM GMT (Updated: 5 March 2019 8:52 PM GMT)

ஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்திய துணை ராணுவ படையினர் மீது நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் கடந்த மாதம் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்கள் 2 பேருக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.

இந்த பிரச்சினை குறித்து பாகிஸ்தான் சார்பில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க இருந்த பந்தயத்துக்கான ஒலிம்பிக் கோட்டா ரத்து செய்யப்பட்டது. அத்துடன் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் எந்த நாட்டு வீரர்களும் பங்கேற்க இடையூறு செய்யமாட்டோம் என்று இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் வரை இந்தியாவில் சர்வதேச போட்டிகள் எதுவும் நடத்தக்கூடாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இடைக்கால தடை விதித்தது.

ஆசிய மல்யுத்த போட்டி நடைபெறுவதில் சிக்கல்

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியை ஜூலை 9–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை இந்தியாவில் நடத்த இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் அனைத்து நாட்டு வீரர்களும் பங்கேற்க அனுமதி அளிப்போம் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்தால் தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். இதனால் தற்போது இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூ‌ஷன் ‌ஷரன்சிங் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்த விவகாரத்தில் தீர்வு காணும்படி இன்று நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறோம். மல்யுத்தமும், மல்யுத்த வீரர்களும் பாதிக்கப்படக்கூடாது. ஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டி பாதிக்காமல் இருக்க உத்தரவாதம் அளிக்கும் படி மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் வைக்க இருக்கிறோம். ஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டி இந்தியாவில் நடைபெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்த முயற்சிகளை எடுப்போம். ஒருங்கிணைந்த உலக மல்யுத்த சம்மேளனம் அறிவுறுத்தி இருப்பது என்ன? என்பதை நான் இன்னும் படிக்கவில்லை. தவறு இல்லாத பட்சத்தில் எந்தவொரு விளையாட்டும் பாதிக்கப்படக்கூடாது’ என்று தெரிவித்தார்.


Next Story