துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 6 March 2019 9:15 PM GMT (Updated: 6 March 2019 9:12 PM GMT)

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

* இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அதே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தொடரை கைப்பற்ற ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி முயற்சிக்கும். அதேநேரத்தில் தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

* டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து இழிவாக பேசியது சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து அவர்கள் இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது. பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டனர். இருவர் மீதான பிரச்சினை குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அவரிடம் இந்த பிரச்சினையை விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் பரிந்துரை செய்யவில்லை. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் அளித்த ஒரு பேட்டியில், ‘விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது முழுமையான கூட்டம் இதுவாகும். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்ய இருக்கிறோம்’ என்று தெரிவித்தார். 2 வீரர்கள் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

* ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த ஆண்டு 85 முதல் 86 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்தேன். இந்த ஆண்டு 87 முதல் 88 மீட்டர் தூரம் வரை நிலையாக ஈட்டி எறிய வேண்டும் என்று விரும்புகிறேன். 90 மீட்டர் இலக்கை எட்டினால் மகிழ்ச்சி அடைவேன். குறிப்பிட்ட தூரத்திற்கு நிலையாக எறிய வேண்டும் என்பது தான் முக்கியமானதாகும். 90 மீட்டர் தூரத்தை தாண்ட வேண்டும் என்று எனக்கு நானே நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. ஒவ்வொரு முறை போட்டிக்கு செல்லும் போதும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கிறேன். கடந்த ஆண்டு எனது செயல்பாடு மிகவும் திருப்தி அளித்தது. இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாகும். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டி, டயமன்ட் லீக் போட்டி ஆகியவை வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

* 2017-ம் ஆண்டில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரேமி கிரிமெரை, உள்ளூர் கிரிக்கெட் அதிகாரி ராஜன் நாயர் சூதாட்டம் தொடர்பாக அணுகிய குற்றச்சாட்டு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது. இதில் ராஜன் நாயருக்கு கடந்த ஆண்டு 20 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் இயக்குனர் எநாக் இகோபேவுக்கு கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.

* தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இலங்கை வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 45.1 ஓவர்களில் 251 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 94 ரன்னும் (70 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 57 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி தரப்பில் திசரா பெரேரா 3 விக்கெட்டும், மலிங்கா, தனஞ்செயா டி சில்வா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து இருந்தது.


Next Story