துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 8 March 2019 10:00 PM GMT (Updated: 8 March 2019 9:51 PM GMT)

இந்தியா–இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

நியூசிலாந்து–வங்காளதேசம் டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் ரத்து

* வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்க இருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பே அங்கு மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

முஸ்தாக் அலி கிரிக்கெட்: ஜார்கண்ட் அணி ‘திரில்’ வெற்றி

* சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் லீக் சுற்று ஆட்டம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நேற்று தொடங்கியது. இதில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. அதில் முதல் பந்தை சிராக் காந்தி பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவை என்ற நிலையில் அந்த பந்தில் சிராக் காந்தி ரன் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஜார்கண்ட் அணி 1 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ரெயில்வே அணியை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் கர்நாடக அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை எளிதில் தோற்கடித்தது.

இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா?

* இந்தியா–இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. ஒரு நாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பெண்கள் அணியினர் 20 ஓவர் போட்டியில் போதிய ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி தொடரை முழுமையாக கைப்பற்ற முனைப்பு காட்டும். அதேநேரத்தில் இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதியில் மும்பை–கோவா இன்று மோதல்

* 5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் மும்பை சிட்டி–எப்.சி.கோவா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டத்தில் முதலாவது சுற்று ஆட்டம் மும்பையில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. எப்.சி. கோவா அணி இந்த சீசனில் 2 லீக் ஆட்டங்களிலும் மும்பை அணியை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு உள்ளூரில் மும்பை அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ‘கோவா அணிக்கு எதிரான முந்தைய 2 லீக் ஆட்டங்களிலும் தவறு இழைத்ததால் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். இந்த ஆட்டம் வேறுபாடானதாகும்’ என்று மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா தெரிவித்துள்ளார்.

புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம்

* 12 அணிகள் இடையிலான 7–வது புரோ கபடி லீக் தொடர் ஜூலை 19–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான முழுமையான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். இந்த சீசனுக்கான அணிகள் வீரர்களை தக்க வைத்தல் இந்த மாதம் மத்தியில் முடிவடையும். வீரர்களுக்கான ஏலம் மும்பையில் ஏப்ரல் 8 மற்றும் 9–ந் தேதிகளில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில் நடந்தது. இந்த ஆண்டுக்கான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டம் மீண்டும் ஜெய்ப்பூரில் அரங்கேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்னிஸ்: குணேஸ்வரன் அபாரம்

* ஜோகோவிச், ரபெல் நடால், ரோஜர் பெடரர் உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 97–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், உலக தரவரிசையில் 69–வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேரை சந்தித்தார். 1 மணி 29 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 7–6 (7–5), 6–4 என்ற நேர்செட்டில் பெனோய்ட் பேரை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். பிரஜ்னேஷ் குணேஸ்வரனின் டென்னிஸ் வாழக்கையில் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.


Next Story