சிறப்புக் கட்டுரைகள்

விளையாட்டு உலகம் : பிரகாஷ் படுகோனே + "||" + Sports World: Prakash Padukone

விளையாட்டு உலகம் : பிரகாஷ் படுகோனே

விளையாட்டு உலகம் : பிரகாஷ் படுகோனே
இறகு பந்து எனப்படும் பேட்மிண்டன் ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைத்தவர் பிரகாஷ் படுகோனே. அவரது சாதனைகள் குறித்து காண்போம்.
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா என்ற நகருக்கு அருகில் உள்ள படுகோனே என்ற கிராமத்தில் 1955- ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி பிரகாஷ் பிறந்தார். இந்த கிராமத்தில் பிறந்தவர்கள் தங்கள் பெயருடன் கிராமத்தின் பெயரான படுகோனே என்பதை சேர்த்துக்கொள்வது வழக்கம். அதுபோல பிரகாஷ் தனது பெயருடன் கிராமத்தின் பெயரான படுகோனே என்பதையும் சேர்த்து பிரகாஷ் படுகோனே ஆனார்.

பிரகாஷ்சின் தந்தை பெயர் ரமேஷ். இவர் மைசூர் பேட்மிண்டன் சங்கத்தின் செயலாளராக நீண்ட காலம் இருந்தார். அவரும் சிறந்த பேட்மிண்டன் வீரர் ஆவார். இதனால் சிறுவயதில் இருந்தே பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் ஆட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அவரது உறவினர் ஒருவர் சிறந்த ஜோதிடர் ஆவார். அவர் பிரகாஷின் ஜாதகத்தை கணித்து, வருங்காலத்தில் இவர் சிறந்த வீரராக திகழ்வார் என்றும் இந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைப்பார் என்றும் ஆருடம் கூறினார்.

1964- ம் ஆண்டு மாநில ஜூனியர் சாம்பியன் போட்டியில் பிரகாஷ் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அதன்பிறகு 6 ஆண்டுகள் கழித்து அவர் தேசிய சாம்பியன் ஆனார். தொடக்க காலத்தில் இவர் தனது கதாநாயகனாக இந்தோனேசியா நாட்டைச்சேர்ந்த ரூடி ஹார்டோனோ என்பவரை கருதினார். இவர் உலக மற்றும் இங்கிலாந்து நாட்டு சாம்பியன் பட்டங்களை வென்றவர்.

1970- ம் ஆண்டு ஜபர்பூர் நகரில் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இதில் ரூடி ஹார்டோனோ கலந்துகொண்டு ஆடினார். அப்போது அவரது ஆட்டத்தை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு பிரகாஷ்சுக்கு கிடைத்தது. பின்னர் அவரை சந்தித்த பிரகாஷ் தனது பயிற்சி முறை மற்றும் உடற்பயிற்சி முறைகள் ஆகியவற்றை பார்த்து ஆலோசனைகள் கூறுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் பிரகாஷ் பயிற்சி செய்யும் முறைகளையும், அவரதுபயிற்சி ஆட்டத்தையும் பார்த்தார்.

அவரது பயிற்சி முறைகளை அறிந்த ரூடி அடுத்த நாள் அதை தானும் பின்பற்றத்தொடங்கிவிட்டார். பிரகாஷ் படுகோனே செய்வது போல ஆயிரம் முறை ஸ்கிப்பிங் செய்வது, உடற்பயிற்சி கூடத்தில் எடைகள் தூக்கி பயிற்சி செய்வது, நீண்ட தூரம் ஓடுவது போன்ற பயிற்சிகளை செய்தார். இதைப்பார்த்த பிரகாஷ் ஆச்சரியம் அடைந்தார்.

இதுபற்றி அவர் பின்னர் கூறுகையில், ‘ஒருவர் தலைச்சிறந்த உலக சாம்பியன் ஆக இருக்க வேண்டும் என்றால் பிறரிடம் உள்ள நல்ல பயிற்சி முறைகளை பின்பற்றுவது அவசியம் என்பதை இதன் மூலம் நான் அறிந்துகொண்டேன். அதில் இருந்து நானும் சகவீரர்களிடம் உள்ள சிறந்த பயிற்சி முறைகளை கற்றுக்கொண்டேன்’ என்றார்.

சரியான உடற்பயிற்சி மூலம் உடல் தகுதி திறனை வளர்த்துக்கொள்வது, தாக்குதல் ஆட்டத்திறன் போன்றவற்றின் மூலம் பிரகாஷ் சிறந்த வீரராக தன்னை வளர்த்துக்கொண்டார். 1971-ம் ஆண்டில் ஜூனியர் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். அதன்பிறகு தொடர்ந்து எட்டு ஆண்டுகள் அவர் தேசிய சாம்பியன் ஆக திகழ்ந்தார். 1980-ம் ஆண்டு பிரகாஷ் அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் பெற்றார். எப்படி டென்னிஸ் போட்டிகளில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் சிறப்பு மிக்கதோ அதுபோல அகில இங்கிலாந்து சாம்பியன் பட்டமும் முக்கியமானது.

1980-ம் ஆண்டு சுவீடிஷ் ஓப்பன் சாம்பியன் ஆட்டத்தில் பிரகாஷ் தனது மானசீக குருவான ரூடியை சந்தித்தார். இந்தப்போட்டியில் பிரகாஷ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட் ஆட்டத்தில் 14-0 என்ற நிலையில் பிரகாஷ் முன்னிலையில் இருந்தார். இருப்பினும் தனது மானசீக குருவுக்கு மரியாதை தரும் வகையில் ஒரு செட்டில் மட்டும் அவர் வேண்டும் என்றே தோல்வியை சந்தித்தார். முடிவில் அவர் அந்த போட்டியில் வென்றார்.

ஆடுகளத்திலும், ஆடுகளத்திற்கு வெளியேயும் சிறந்த மனிதாபிமானத்துடன் இருப்பவர் என்ற சிறப்பு பிரகாஷ் படுகோனேக்கு உண்டு. எதிர் அணி வீரர் அனுப்பும் பந்தை பாதியிலேயே வழிமறித்து அடித்து ஆடுவது இவரது சிறப்பம்சம். இவ்வாறு விளையாடுவது சாதாரணமானது அல்ல. மிகவும் தேர்ந்த ஆட்டக்காரர்களால் மட்டுமே இது சாத்தியமாகும்.

பிரகாஷ் படுகோனேயின் மனைவி பெயர் உஜ்ஜாலா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு. ஒரு மகள் தீபிகா முன்னணி இந்தி நடிகையாக திகழ்கிறார். அடுத்த மகள் அனிஷா சிறந்த கோல்ப் வீராங்கனையாக இருக்கிறார்.

விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், பேட்மிண்டன் அகடமி மூலம் இளம் வீரர்-வீராங்கனைகளுக்கு பிரகாஷ் படுகோனே பயிற்சி அளித்து வருகிறார்.