துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 15 March 2019 11:39 PM GMT (Updated: 15 March 2019 11:39 PM GMT)

ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார்.

ஹாங்காங்,

3-வது ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹாங்காங்கில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் பிரிவில் நடந்த 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தபிதா 13.86 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஜப்பான் வீராங்கனை மயூகோ 14.03 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், சீன வீராங்கனை ஜின்யூ 14.44 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

துளிகள்

* சீனா கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இத்தாலி முன்னாள் வீரர் 46 வயதான பாபியோ கனவரோ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2006-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இத்தாலி அணியின் கேப்டனாக இருந்தவர் ஆவார்.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டிக்கான தகுதி சுற்றில் உக்ரைன் மற்றும் செர்பியாவுக்கு எதிராக விளையாடும் போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு பிறகு கிறிஸ்டியானா ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

* ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பொதுவான இடமான டேராடூனில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில 60 ஓவர்களில் 172 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக, கடைசி வீரராக இறங்கிய டிம் முர்டாக் அரைசதம் (54 ரன்) அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்துள்ளது.

* மும்பை சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வு கமிட்டி தலைவர் பதவியை அஜீத் அகர்கர் நேற்று ராஜினாமா செய்தார். தேர்வு குழுவில் இருந்த மற்ற 3 உறுப்பினர்களும் பதவியில் இருந்து விலகினர்.

* பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை (17 வயதுக்குட்பட்டோர்)2020-ம் ஆண்டில் நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றியிருக்கிறது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கும்பிளே, உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலை வெளியிட்டுள்ளார். அவரது அணியில், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், ரிஷாப் பான்டுக்கு இடம் அளித்துள்ளார். பேட்டிங் வரிசையில் 4-வது இடத்தில் டோனி ஆட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது.

Next Story