பிற விளையாட்டு

இனியன்... இப்போது கிராண்ட்மாஸ்டர் + "||" + Inian ... now Grandmaster

இனியன்... இப்போது கிராண்ட்மாஸ்டர்

இனியன்... இப்போது கிராண்ட்மாஸ்டர்
சதுரங்கத்தில் இந்தியாவின் இளம் நம்பிக்கைகளில் ஒருவரான ஈரோட்டின் இனியன், இப்போது கிராண்ட்மாஸ்டர். ஆம், இந்தியாவின் 61-வது, தமிழகத்தின் 23-வது கிராண்ட்மாஸ்டர் இவர்.

கிராண்ட்மாஸ்டருக்கான நிறைவுப் புள்ளிகளை சமீபத்திய பிரான்ஸ் தொடரில் பெற்றார், இனியன்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய பயணக் களைப்புடன், பாராட்டு மழையில் நனைந்த களைப்பும் சேர்ந்துகொண்டபோதும் இனியன் நம்மிடம் இனிமையாகப் பேசினார்...

நீங்கள் கிராண்ட்மாஸ்டருக்கான நிறைவுப்புள்ளிகளைப் பெற்ற பிரான்ஸ் சதுரங்கத் தொடர் பற்றிக் கூறுங்கள்...

ரஷ்யாவில் நடைபெற்ற ஏரோபிளாட் செஸ் தொடரில் பங்கேற்றுவிட்டு, அப்படியே பிரான்ஸ் சென்றேன். அங்கு தலை நகர் பாரீஸ் அருகில் இந்த நாசீல் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. இத்தொடருக்கு முன்பு 2495 எலோ ரேட்டிங் புள்ளிகள் பெற்றிருந்த எனக்கு, கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு 5 புள்ளிகளே தேவைப்பட்டன. உக்ரைன் வீரர் ஒருவருக்கு எதிரான ஆறாவது சுற்று மோதலின்போது நான் அந்தப் புள்ளிகளைப் பெற்றேன்.கிராண்ட்மாஸ்டரும் ஆனேன்.

இந்தப் போட்டித் தொடரில் நீங்கள் பெற்ற இடம் என்ன?

இப்போட்டித் தொடரில் 16 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றார்கள். இந்தியாவில் இருந்து நான் உள்ளிட்ட 3 பேர் கலந்துகொண்டோம். இந்தத் தொடரில் நான் 5 வெற்றிகள் பெற்றேன், 4 ‘டிரா’ செய்தேன். இறுதியில், முதலிடம் பெற்ற ஒரு பிரான்ஸ் வீரருக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடம் பெற்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக, என் சதுரங்கப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாக கிராண்ட்மாஸ்டர் ஆகியிருக்கிறேன்.

கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு முந்தைய சிறிது காலம் குறித்து?

நான் கடந்த ஆண்டு ஸ்பெயின் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியிலேயே எனது மூன்றாவது மற்றும் நிறைவு ஜி.எம். தகுதிநிலையை (நார்ம்) பெற்றுவிட்டேன். ஆனால் 2500 என்ற ரேட்டிங் புள்ளிகளை எட்டாததால் கிராண்ட்மாஸ்டர் தகுதி பெறவில்லை. இதற்கிடையில், கடந்த 7 மாதங்களில் நான் மேலும் இரு ஜி.எம். தகுதிநிலைகளை பெற்றுவிட்டேன். இடையில் சில சரிவுகள் ஏற்பட்டதால், ஜி.ம். தகுதியைப் பெறுவது தள்ளிப் போனது. இல்லாவிட்டால், ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே கிராண்ட்மாஸ்டர் ஆகியிருப்பேன்.

உங்களுக்கு தற்போது என்ன வயதாகிறது?

எனக்கு 16 வயது. ஈரோடு இண்டியன் பப்ளிக் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறேன்.

இவ்வளவு விரைவாக கிராண்ட்மாஸ்டர் ஆவோம் என்று நினைத்தீர்களா?

நான் 5 வயதில் செஸ் விளையாடத் தொடங்கினேன். ஆறாவது வயதில் முறைப்படி பயிற்சி பெற்று விளையாடலானேன். ஆரம்பம் முதலே சீராக விளையாடி பல வெற்றிக் கட்டங்களைத் தாண்டி வந்தேன். எனவே ஓரளவு சீக்கிரமாகவே ஜி.எம். ஆகிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

கிராண்ட்மாஸ்டர் ஆன அந்தத் தருணத்தில் எப்படி உணர்ந்தீர்கள்?

எந்த ஒரு சதுரங்க வீரர், வீராங்கனைக்கும் கிராண்ட்மாஸ்டர் என்ற தகுதி முக்கியமான இலக்காக இருக்கும். எனக்கும் அப்படித்தான். நான் அந்தச் சிகரத்தை எட்டியதும் மிகவும் மகிழ்ந்தேன். உடனிருந்த அம்மா வுடன் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். என்னைவிட என் குடும்பத்தினரும், என் நலன் விரும்பி களும்தான் அதிக சந்தோஷப்பட்டார்கள்.

உங்களின் இதுவரையிலான சதுரங்கப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது என்ன தோன்றுகிறது? இந்த உயரத்தை எட்ட அதிகம் கஷ்டப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக நான் நிறைய உழைத்துத்தான் இந்த உயரத்தை எட்டியிருக்கிறேன். அதற்காக, நான் அதிகம் கஷ்டப்பட்டதாக நினைக்கவில்லை. என் விளையாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட எனது பெற்றோர் பன்னீர்செல்வம்- சரண்யா, என்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் தங்கை இனிய கீர்த்தி மற்றும் எனது பயிற்சியாளர் களுக்கும் பிரதான பங்கு இருக்கிறது. ஜி.எம். தகுதியுடன் இந்தியா திரும்பிய பிறகு நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். அப்போது அவர், எனக்கு என்ன உதவி தேவையென்றாலும் செய்வதாகக் கூறி உற்சாகப்படுத்தியது மறக்கமுடியாதது.

பயிற்சியாளரின் ஆதரவு பற்றிக் கூறுங்களேன்...

நான் தற்போது சென்னையைச் சேர்ந்த பயிற்சியாளர் விஸ்வேஸ்வரனிடம் பயிற்சி பெறுகிறேன். வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்கும்போது, அன்றைய போட்டிகள் முடிந்தவுடன் பயிற்சியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அன்றைய போட்டி பற்றி விவாதிப்பேன். பெரும் பாலும் நம் நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் நான்கைந்து மணி நேரம் வித்தியாசம் இருக்கும். எனவே, நான் சில போட்டிகள் முடிந்து பயிற்சியாளரிடம் பேசும்போது நம்மூரில் நள்ளிரவாகி இருக்கும். ஆனால் அந்த நேரத்திலும் அவர் என்னுடன் உற்சாகமாக விவாதித்து, அடுத்த போட்டியில் எப்படி ஆட வேண்டும் என்று ‘டிப்ஸ்’ கொடுப்பார். அது ரொம்பப் பெரிய விஷயம்.

நீங்கள் கிராண்ட்மாஸ்டர் ஆனபிறகு, நமது ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்திடம் பாராட்டுப் பெற்றீர்களா?

ஆம், அவர் என்னை டுவிட்டரில் வாழ்த்தி இருந்தார். அது மிகவும் ஊக்கமூட்டுவதாக இருந்தது.

ஆனந்தை சந்தித்திருக்கிறீர்களா?

முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை ஒன்றிரண்டு முறை சந்தித்துப் பேசும் வாய்ப்புப் பெற்றிருக்கிறேன். இந்நாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

பிரக்ஞானந்தா, குகேஷ், தற்போது நீங்கள் என்று உலகிலேயே இளம் கிராண்ட்மாஸ்டர்கள் எல்லாம் தமிழகத்தில் இருந்து தோன்றிக் கொண்டிருக்கிறீர்களே?

ஆமாம். இது நல்ல விஷயம்தான். ஓர் ஆரோக்கியமான போட்டி இருக்கும். அது நம் திறமையை வளர்த்துக்கொள்ள உதவும். பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் நல்ல திறமை சாலிகள்.

கிராண்ட்மாஸ்டர் ஆகிவிட்ட நிலையில், இனி நீங்கள் விளையாடும் போட்டிகளில் நெருக்கடியை உணர்வீர்களா?

கிராண்ட்மாஸ்டர் என்பதால் என் மீது பரவலாக ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். அந்தப் பொறுப்பை உணர்ந்து விளையாடுவேன். அதேநேரம் நான் எந்த நெருக்கடியையும் என் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டேன்.

நீங்கள் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறீர்கள். சதுரங்கத்தில் இன்று சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை எப்படி இருக்கிறது?

வழக்கமாக சர்வதேச சதுரங்க அரங்கில் ரஷிய வீரர், வீராங்கனைகள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். தற்போது நாமும் ஒரு வலுவான சக்தியாக வளர்ந்து வருகிறோம். பிற நாட்டு வீரர்கள், ‘இந்தியாவா?’ என்று நம்முடன் மோத அஞ்சும் நிலைக்கு வந்திருக்கிறோம். கடந்த இளையோர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில்கூட நாம் இரண்டாமிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவுகளை உங்கள் குடும்பத்தினர் எப்படிச் சமாளிக்கிறார்கள்?

அதற்கு, எங்கள் ஸ்பான்சரான ‘ஒளிரும் ஈரோடு’ அமைப்புக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எனக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்ததால்தான் என்னால் இந்த அளவு சாதிக்க முடிந்திருக்கிறது.

நீங்கள் அடுத்து பங்கேற்கவிருக்கும் முக்கியப் போட்டிகள்?

இன்னும் 10 நாட்களில், ஷார்ஜா ஓபன், துபாய் ஓபன் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

உங்களின் அடுத்த பெரிய இலக்கு?

நான் 2800 புள்ளிகளை எட்டினால், உலக சாம்பியன் பட்டம் போன்றவற்றில் போட்டியிட முடியும். எனவே இனி நான் அதை இலக்கு வைத்து உழைப்பேன்.

இனியன் அதையும் சாதிப்பார் என்று உறுதியாகக் கூறலாம்.