துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 18 March 2019 10:15 PM GMT (Updated: 18 March 2019 6:56 PM GMT)

2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.


* அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, மால்டோவை (வருகிற 22-ந் தேதி) சந்திக்கிறது. இந்த தகுதி சுற்று போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அந்தோனி மார்ஷியல் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அட்லெடிகோ மாட்ரிட்ஸ் வீரர் தாமஸ் லீமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

* 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான உரிமத்தை பெற முயற்சி செய்கையில், ஜப்பான் ஒலிம்பிக் சங்க தலைவராக இருக்கும் சுனேகாசூ தகெதா சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் கிளம்பியது. ஆனால் இதனை சுனேகாசூ மறுத்தார். 2001-ம் ஆண்டு முதல் ஜப்பான் ஒலிம்பிக் சங்க தலைவராக இருக்கும் சுனேகாசூவின் பதவி காலம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் அவர் ஊழல் புகார் எதிரொலியாக தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

* இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினர் மற்றும் நிர்வாகிகள் மும்பையில் நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் ஷசாங் மனோகரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஊக்க மருந்து சோதனை விஷயத்தில் அடுத்த 6 மாதத்துக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியுடன் இனைந்து செயல்பட இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பதிவு செய்து இருக்கும் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனையை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி நடத்தும். இந்த சோதனை திருப்தி அளிக்காதபட்சத்தில் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படமாட்டாது’ என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ‘2016-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வரிவிலக்கு தொகை ரூ.150 கோடி மற்றும் இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை (2021) போட்டி, 50 ஓவர் உலக கோப்பை (2023) போட்டி ஆகியவற்றுக்கான வரிவிலக்கு தொகையை 2023-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது’ என்றார்.

* ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சி பெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று முன்தினம் இரவு இரண்டு அணியாக பிரிந்து காட்சி போட்டியில் ஆடினார்கள். இந்த காட்சி போட்டியை காண ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் புகுந்தார். அவர் டோனியை நோக்கி ஓடினார். இதனை கவனித்த டோனி அந்த ரசிகரிடம் சிக்காமல் இருக்க மைதானத்துக்குள் அங்கும், இங்கும் ஓட்டம் பிடித்தார். ஆனால் விடாமல் துரத்திய வாலிபர் டோனியை நெருங்கினார். அப்போது அருகில் நின்ற பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜியின் பின்னால் டோனி மறைந்து நின்றார். பின்னர் டோனியே அந்த வாலிபரிடம் வந்து கைகுலுக்கி கட்டி அணைத்தார். அதன் பிறகு அந்த வாலிபர் மகிழ்ச்சியுடன் வெளியேறினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரை திருவல்லிக்கேணி போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் மதுரை மாகாளிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவரான அரவிந்த்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. எம்.பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வரும் அவர் டோனியை பார்ப்பதற்காகவே மதுரையில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்துள்ளார். விசாரணைக்கு பிறகு போலீசார் அந்த வாலிபருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

* ஹீரோ சப்-ஜூனியர் (13 வயதுக்கு உட்பட்டோருக்கான) லீக் கால்பந்து போட்டி சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு எஸ்.எஸ்.என். கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கிரேட் கோல்ஸ் அணிகள் மோதுகின்றன.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எல்லா வகையிலான போட்டியிலும் விளையாடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் தவிர்க்க வேண்டும். புல்வாமா தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐ.சி.சி. போட்டியை இந்திய அணி புறக்கணிப்பது கடினமான காரியம் தான். ஆனால் ஆசிய போட்டியில் பாகிஸ்தானை விளையாட விடாமல் தடுக்கலாம். 2003-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி, ஜிம்பாப்வே செல்ல மறுத்து அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணித்தது. அதேபோல் இந்த உலக கோப்பை போட்டியில் நாம் பாகிஸ்தானுக்கு எதிரான எல்லா ஆட்டத்தையும் தவிர்க்கலாம். கிரிக்கெட்டை விட நாடு தான் முக்கியம். அரசியலில் ஈடுபடுவது குறித்து நான் முடிவு எதுவும் செய்யவில்லை. இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் வர்ணனையாளராக பணியாற்ற இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.



Next Story