‘பேப்பர் போடும் பையனாக’ இருந்து சர்வதேச சாம்பியனாக உயர்ந்தவர்


‘பேப்பர் போடும் பையனாக’ இருந்து சர்வதேச சாம்பியனாக உயர்ந்தவர்
x
தினத்தந்தி 30 March 2019 11:00 AM GMT (Updated: 30 March 2019 11:00 AM GMT)

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தீபக் போரியா, சாதாரண ‘பேப்பர் போடும் பையனாக’ இருந்து சர்வதேச சாம்பியனாக உயர்ந்திருக்கிறார்.

கடந்த மாதம் நடைபெற்ற, மக்ரான் கோப்பை சர்வதேச குத்துச்சண்டைத் தொடரில் முதல்முறையாக அறிமுகமான தீபக், முதல் போட்டியிலேயே தங்கம் வென்று அசத்தினார்.

தொடர் போராட்டம்

இந்தச் சாதனைக்குப் பின்னே, தீபக்கின் இடைவிடாத போராட்டம் இருக்கிறது. களத்தில் எதிராளி களுடன் மட்டுமல்ல, நிஜத்தில் வாழ்க்கையுடனும், அது அன்றாடம் தரும் சவால்களுடனும் தீபக் போராட வேண்டியிருந்தது.

ஹிசாரை சேர்ந்த இந்த 21 வயது இளம் வீரர், ‘‘கடவுள் கருணையற்றவர் அல்ல’’ என்று புன்னகைக்கிறார்.

ஆம், கடும் சோதனைகளுக்குப் பின் தீபக் பக்கம் கருணைப் பார்வையை கடவுள் திருப்பியிருக்க வேண்டும். ஒரு குத்துச்சண்டை வீரருக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுப்பொருட்களான பால், முட்டை போன்றவற்றைக் கூட வாங்க முடியாத கஷ்டத்தில் இருந்தவர் இவர்.

தீபக்கை சிறுவயது முதலே குத்துச்சண்டை கவர்ந்தது. ஆனால் வீட்டின் சூழலோ அவரது ஆசைக்கு எதிராக இருந்தது.

ஆனாலும், தனது மாமா ஒருவரின் தூண்டுதலின்படி, ஹிசாரில் உள்ள யுனிவர்சல் குத்துச்சண்டை அகாடமியில் பயிற்சி பெறத் தொடங்கினார். பயிற்சியாளர் ராஜேஷ் ஷெரான் இவருக்குப் பயிற்சி அளித்தார்.

குத்துச்சண்டையில் இருந்து விலகல்

இவரது அப்பா ஊர்க்காவல் படை வீரர், அம்மா இல்லத்தரசி என்பதால், பெரிதாக பொருளாதார பின்புலம் இல்லை. ஒரு கட்டத்தில், தீபக் குத்துச்சண்டை பயிற்சிக்கே ‘குட்பை’ சொல்ல வேண்டிய நிலை வந்துவிட்டது.

‘‘அது 2009-ம் ஆண்டு. நான் குத்துச்சண்டைப் பயிற்சியில் இருந்து மனமில்லாமல் விலக நேர்ந்தது. பள்ளிப் படிப்புடன், குத்துச்சண்டைப் பயிற்சி, அதுதொடர்பான செலவுகளுக்காகவும் நானே வேலை செய்துதான் பணம் திரட்டினேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. ஒரு குத்துச்சண்டை வீரருக்கு ஊட்டமான உணவு அவசியம். ஆனால் அதற்கான செலவுக்கு எனது வருமானம் இடம் கொடுக்கவில்லை" என்கிறார்.

அப்படியே ஆறு மாதம் கழிந்துவிட்டது. அப்போதுதான், ஒரு குத்துச்சண்டை திறமைசாலி, வறுமையால் வீணாகிப்போய்விடக் கூடாது என்று நினைத்து, பயிற்சியாளர் ராஜேஷ் கை கொடுக்க முன்வந்தார்.

‘‘அவர் எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். நான் பயிற்சிக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று கூறிவிட்டதுடன், எனது உணவுச் செலவுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். தினமும் பால், முட்டை, பழங்கள் என்று எனக்குத் தேவையான எல்லாவற்றையும் பயிற்சியாளர் வாங்கிக் கொடுப்பார்’’ என்கிறார்.

அடுத்தடுத்த சோதனைகள்

ஆனால் சவால்கள் முடிந்தபாடில்லை. 2011-ம் ஆண்டில் தீபக்கின் வலதுகையில் ஏற்பட்ட எலும்பு முறிவு, குத்துச்சண்டையில் இவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி நின்றது.

ஆனால் தீமையிலும் ஒரு நன்மையாக, சிகிச்சை காலத்தில் தீபக் வலதுகையை அசைக்காமல் இடதுகையையே பயன்படுத்த வேண்டியிருந்ததால் அது வலுப்பெற்றது. தற்போது இவரால், குத்துச்சண்டை வளையத்தில் இரு கைகளாலும் சரமாரியாக குத்து விட முடிகிறது.

தடைகள், இடையூறுகளை எல்லாம் தாண்டி, கடந்த 2012-ம் ஆண்டில் தீபக் முதல்முறையாக வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்தார். அப்போது, மாநில அளவிலான ஒரு குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்றார் இவர்.

ஆனால் அடுத்த சோதனையாக, இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு தடை விதிக்கப்பட, சவால் அளிக்கும் மோதல்கள், தேசிய அளவிலான போட்டிகள் எல்லாம் இல்லாதுபோயின.

ஒருபுறம் இப்படி என்றால், மறுபுறம், வீட்டில் அடுப்பெரிய தீபக் கிடைத்த வேலைகளைச் செய்ய வேண்டி வந்தது. அவற்றில், அதிகாலையில் வீடு வீடாக நாளிதழ்கள் போட்டதும் அடங்கும். மகன் படும் கஷ்டத்தைப் பார்த்து, தாய் வயல் வேலைகளுக்குப் போனார்.

வெளிச்சம் வந்தது

2016 துவக்கத்தில் தீபக் வாழ்வில் வெளிச்சம் விழுந்தது. பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ராணுவ ஆட்தேர்வில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் விளைவாக தீபக்குக்கு நல்ல பயிற்சி வசதிகளும், மோதுவதற்கு சரிக்குச் சரியான போட்டியாளர்களும் கிடைத்தனர். மீண்டும் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்த இவர், புனேயில் உள்ள ராணுவ விளையாட்டுப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பையும் பெற்றார்.

‘‘முப்படை குத்துச்சண்டை அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான், 2016-ல் படை அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோற்றேன். ஆனால் அடுத்த ஆண்டு, அதே போட்டியில் தங்கம் வென்றேன்’’ என்கிறார்.

மறுபடியும் அடுத்த தடைக்கல். விசாகப்பட்டினத்தில் நடந்த தேசிய சீனியர் குத்துச்சண்டைப் போட்டியில் முதல்முறையாக களமிறங்கிய தீபக், ‘நாக் அவுட்’ ஆகி சுயநினைவிழந்தார். மூன்று மாதங்கள் இவரால் போட்டிகளில் பங்கேற்க மட்டுமல்ல, பயிற்சி கூட செய்ய முடியவில்லை.

சர்வதேச சாதனை

இதுபோன்ற கஷ்டங்கள்தான், தீபக்கை உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் வலுவான வீரர் ஆக்கின. கடந்த ஆண்டில் தேசிய சீனியர் போட்டி, படை அணிகளுக்கு இடையிலான போட்டி போன்றவற்றில் வென்றதுடன், தேசிய அளவில் சிறந்த வீரர் விருதையும் பெற்றார்.

எல்லாவற்றிலும் உச்சமாக, ஈரான் சபாகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மக்ரான் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு தீபக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈரான் சென்ற இந்திய அணியில் இடம்பெற்ற 6 பேரில், தங்கம் வென்ற ஒரே வீரர் இவர்தான்.

49 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில், ஈரானின் ஜாபர் நசேரியை வீழ்த்தினார், தீபக்.

சர்வதேச அரங்கில் வெற்றி மேடையில் ஏறிவிட்டார் என்றாலும், ‘‘இன்னும் நான் போக வேண்டிய தூரம் அதிகம்’’ என்கிறார்.

இந்த நிதானம், தீபக் போரியாவுக்கு இன்னும் பல வெற்றிகளைச் சேர்க்கும்.

Next Story