பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது.

* உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும், ஆஸ்திரியாவின் டோமினிக் திம் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 7-வது இடத்தையும் பெற்றனர். கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2 இடம் ஏற்றம் கண்டு 8-வது இடத்தையும், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ ஒரு இடம் சரிந்து 9-வது இடத்தையும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ஒரு இடம் சறுக்கி 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்தையும், மியாமி போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 3 இடம் முன்னேறி 4-வது இடத்தையும், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

* ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி (ஏர்கன்) சீன தைபேயில் நடந்தது. இதில் இந்திய அணி 16 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசி நாளில் 10 மீட்டர் ஏர்ரைபிள் ஜூனியர் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் யாஷ் வர்தன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் ஜூனியர் ஆண்கள் அணிகள் மற்றும் ஜூனியர் கலப்பு அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

* உலக ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை உலக ஸ்குவாஷ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியன் அலி பராக் (எகிப்து) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் சவுரவ் கோஷல் 2 இடம் முன்னேறி 10-வது இடத்தை பெற்றுள்ளார். இதன் மூலம் ‘டாப்-10’ தரவரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சவுரப் கோஷல் பெற்றுள்ளார்.