துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 8 April 2019 9:45 PM GMT (Updated: 8 April 2019 7:21 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதல் 6 லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.


* ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தொடக்க சுற்றுடன் வெளியேறியதை தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) அந்த பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விலகினார். இதனை அடுத்து இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பிரபுல் பட்டேல் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கால்பந்து அணிக்கு முடிந்த அளவுக்கு விரைவில் பயிற்சியாளர் நியமனம் செய்யப்படுவார். இந்த மாதத்தில் நியமிக்கப்படலாம்’ என்று தெரிவித்தார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதல் 6 லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியா சமயோஜிதமாக திட்டமிட்டு வர இருக்கும் உலக கோப்பை போட்டிக்காக விராட்கோலிக்கு இப்போதே ஓய்வு கொடுக்க வேண்டும். பெரிய போட்டிக்கு முன்பு அவருக்கு போதிய ஓய்வு அளிக்க வேண்டியது அவசியமானதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இது இந்திய கிரிக்கெட் வாரிய விதிகளுக்கு புறம்பானதாகும் என்றும் கொல்கத்தாவை சேர்ந்த 3 ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் நன்னடத்தை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கும் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின், இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசுக்கு கங்குலி பதில் அளித்து இருக்கிறார். அதில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய விதிகளை நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவிதத்திலும் மீறவில்லை என்பதை மரியாதையுடன் தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


Next Story