பிற விளையாட்டு

விளையாட்டு உலகம் : இந்தியாவின் தங்கமங்கை + "||" + Hemadas, who is proud of India's golden age

விளையாட்டு உலகம் : இந்தியாவின் தங்கமங்கை

விளையாட்டு உலகம் : இந்தியாவின் தங்கமங்கை
இந்தியாவின் தங்கமங்கை என்ற பெருமையைப்பெற்றவர் ஹிமாதாஸ்
சர்வதேச அளவில் தடகள போட்டியில் சாதனை படைத்ததன் மூலம் இந்தியாவின் தங்க மங்கை என்ற பெருமையைப்பெற்றவர் ஹிமா தாஸ். அவரது சாதனைகள் குறித்து பார்ப்போம்.

அசாம் மாநிலத்தில் உள்ள திஹிங் என்ற நகரம் அருகே உள்ள கந்துலிமார் என்ற கிராமத்தில் 9-1-2000 அன்று ஹிமா தாஸ் பிறந்தார். இவரது பெற்றோர் லோன்ஜித்-ஜோமாலி தாஸ். ஹிமா தாசின் தந்தை லோன்ஜித் விவசாயம் செய்து வந்தார். அந்த கிராமம் முழுவதும் வயல்வெளிகள் நிரம்பியது. அங்குள்ள அனைத்து மக்களும் விவசாயம் மற்றும் அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். லோன்ஜித்-ஜோமாலி தம்பதிகளின் 5 பிள்ளைகளில் கடைக்குட்டியாக ஹிமா தாஸ் பிறந்தார். திஹிங் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் ஹிமாதாஸ் படித்தார்.

சிறுவயதில் கால்பந்து ஆட்டத்தில் ஹிமா தாஸ் ஆர்வத்துடன் ஈடுபட்டார். வயல்வெளிகளில் ஓடிஆடி விளையாடியதால் உறுதியான கால்கள் மற்றும் வலுவான உடல் அமைப்புடன் விளங்கினார். சிறுவயதில் தன் வயதையொட்டிய சிறுவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிவந்தார். பள்ளியிலும் ஆண்களுடன் சேர்ந்து கால்பந்து ஆடினார். அசாம் பெண்கள் கால்பந்து அணி அல்லது இந்திய பெண்கள் கால்பந்து அணியில் ே்சர்ந்து ஆடுவது என்பது ஹிமாதாசின் இலக்காக இருந்தது.

ஹிமா தாஸ் படித்த பள்ளியின் விளையாட்டு ஆசிரியை ஷாம்சுல் ஹாகியூ என்பவர் ஹிமாவிடம் அவரது எதிர்காலத்திட்டம் குறித்து பேசினார். அப்போது பெண்கள் கால்பந்து அணியில் சேர்ந்து ஆடுவது தான் தனது லட்சியம் என்று ஹிமா கூறினார். அப்போது ஆசிரியை ஷாம்சுல் ஹாகியூ அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார். ‘இந்தியாவில் பெண்கள் கால்பந்து அணிக்கு பெரிய எதிர்காலம் எதுவும் கிடையாது. மேலும் உனது உடல் திறன் நன்றாக உள்ளது. எனவே தடகள ஆட்டத்தை தேர்ந்து எடுத்தால் உனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்’ என்றார். இதையடுத்து ஹிமா தாஸ் கால்பந்து கனவை உதறிவிட்டு தடகளத்தில் கவனம் செலுத்தினார்.

அசாம் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையைச்சேர்ந்த தடகள பயிற்சியாளர் நிபான் தாஸ் அறிமுகம் ஹிமா தாசுக்கு கிடைத்தது. அவரது மேற்பார்வையில் அவர் தடகள பயிற்சி பெற்றார். படிப்படியாக பல்வேறு தடகள போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகள் பெற்றார். மாநில மற்றும் தேசிய போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டார்.

2018- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணியில் ஹிமா தாஸ் இடம்பிடித்தார். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இவர் 6 வது இடம் பிடித்தார். 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இந்திய அணியில் ஹிமா தாசும் இடம்பிடித்து இருந்தார். இவரது அபாரமான ஓட்டத்திறன் மூலம் இந்திய அணி 7 வது இடம் பிடித்தது.

அதன்பின்னர் மூன்று மாதங்கள் கழித்து பின்லாந்தில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஹிமா தாஸ் கலந்து கொண்டு முதல் இடம்பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் இந்த விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

2018-ம் ஆண்டு ஆகஸ்டு-செப்டம்பர் மாதம் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை இவர் 50.69 வினாடிகளில் கடந்தார்.

‘மோன் ஜாய்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹிமா தாஸ் திறமையைப்பாராட்டி இந்திய அரசு அவருக்கு கடந்த ஆண்டு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. 25-9-2018 அன்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஹிமா தாசுக்கு இந்த விருதை ஜனாதிபதி வழங்கினார். தடகள போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் ஹிமா தாசை இந்தியாவின் தங்கமங்கை என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் 2020- ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் நோக்கில் தனது விளையாட்டுத்திறனை வளர்த்து வருகிறார் ஹிமா தாஸ்.