புதிய சாதனை உயரத்தை எட்டிய சவுரவ்


புதிய சாதனை உயரத்தை எட்டிய சவுரவ்
x
தினத்தந்தி 13 April 2019 9:39 AM GMT (Updated: 13 April 2019 9:39 AM GMT)

புதிய சாதனை உயரத்தை எட்டியிருக்கிறார்.

சென்னை ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல், புதிய சாதனை உயரத்தை எட்டியிருக்கிறார். உலக ஸ்குவாஷ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் ‘டாப் 10’ இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சவுரவ் கோஷல்.

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் (இவர்களும் சென்னைவாசிகள்தான்) ஏற்கனவே உலகின் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறார்கள் என்ற போதும், வீரர்களில் இதுதான் முதல்முறை.

முதல் 10 இடங்களில் உள்ள இந்திய வீரர் மட்டுமல்ல, ஒரே ஆசிய வீரரும் சவுரவ்தான்.

சமீபத்திய சிறப்பான செயல்பாடு களாலேயே, இந்தச் சிறப்பு நிலையை எட்டினார் இவர். பன்னிரண்டாம் இடத்தில் இருந்து இரண்டு அடிகள் முன்னேறி பத்தாம் இடத்தைத் தொட்டிருக்கிறார்.

தனது ஸ்குவாஷ் வாழ்வில் முதல்முறையாக, அமெரிக்கா சிகாகோவில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப்பில் காலிறுதி வரை முன்னேறினார், சவுரவ். அத்துடன் சுவிட்சர்லாந்து சூரிச்சில் நடைபெற்ற பெருமைமிகு கிராஸ்ஹோப்பர் கோப்பை போட்டியில் காலிறுதியை தொட்டார். முக்கிய போட்டிகளில் ஒன்றான பிளாக் பால் ஓபனிலும் சிறப்பாகச் செயல்பட்ட சவுரவ், சீன ஓபனில் அரையிறுதியை அடைந்தார். இவையெல்லாம்தான் இவர் தரவரிசையில் புதிய சிகரம் தொட வைத்தன.

சிறந்த காலகட்டம்

இதுதான் உங்கள் ஸ்குவாஷ் பயணத்தின் சிறந்த காலகட்டம் எனக் கூறுவீர்களா என்று சவுரவிடம் கேட்டால்...

‘‘நிச்சயமாக. எப்போதையும் விட நான் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறேன்’’ என்கிறார், மகிழ்ச்சி பொங்க.

அவரே தொடர்ந்து, ‘‘நான் பின்பற்றிவந்த ஒரு திட்டமிட்ட ஒழுங்குமுறையின் காரணமாகத்தான் தற்போதைய ‘ரிசல்ட்’ கிடைத்திருக்கிறது. பலரும் நினைப்பதைப் போல ஒரே இரவில் எந்த மாயாஜாலமும் நிகழ்ந்துவிடவில்லை’’ என்கிறார்.

நீங்கள் மனரீதியாக மேலும் வலுவாகி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு...

‘‘நான் தற்போது மனரீதியாக எனது ஆட்டம் குறித்து மேலும் திடமாக இருக்கிறேன். நாம் பயிற்சியில் எவற்றில் கவனம் செலுத்த வேண்டும், அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதில் தெளிவாகி இருக்கிறேன்’’ என்று சொல்லும் சவுரவின் குரலில் சந்தோஷ இழையோடுகிறது.

அமைதியும் நிறைவும்

‘கடந்த ஆண்டு உங்களுக்கு சவாலாக அமைந்தது அல்லவா?’

‘‘ஆமாம். தற்போதுதான் எனது விளையாட்டு எனக்கு அமைதியும் நிறைவும் அளிக்கிறது. ஒருவித பாதுகாப்பை உணர்கிறேன். நான் முதிர்ச்சி அடையும்போதுதான் இது வரும். ஆக, நான் முன்பைவிடத் தற்போது அதிகம் முதிர்ச்சி அடைந்திருக்கிறேன் என்று எண்ணு கிறேன்.’’

‘உங்களது வெற்றிப் பயணத்தில் யாருக்கு அதிகப் பங்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?’

‘‘நிச்சயமாக எனது பயிற்சியாளர்கள் மால்கம் வில்ஸ்டிராப்புக்கும் டேவிட் பால்மருக்கும்தான். குறிப்பாக டேவிட், இந்த ஓராண்டு காலத்தில் நான் எனது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள வெகுவாக உதவியிருக்கிறார். நமக்குப் பின்னால் இரு வலுவான பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதே நமக்கு அசுர பலம் தருகிறது.’’

வெளிநாட்டுப் பயிற்சியின் நன்மை

‘உங்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி உதவி செய்கிறதா?’

‘‘நம் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனை களிடம் நல்ல திறமை இருக்கிறது. அவர்கள் சாதிக்கவும், உலக அளவில் தங்கள் பெயரைப் பதிக்கவும் வெளிநாட்டில் பயிற்சி பெறுவது ஒரு நல்ல வழி. வெளிநாட்டில் பயிற்சித் தரம், வசதிகள் எல்லாமே வேறு லெவலில் இருக்கின்றன என்பது உண்மை. முடிந்தால், அதைப் பயன்படுத்திக்கொள்வதில் தப்பில்லை. சர்வதேசச் சூழலில் விளையாட விளையாடத்தான், அனுபவம் கிட்டும், அங்கு சாதிக்கும் தைரியம் வரும். அந்த அனுபவத்துக்கு இணையாக எதையுமே கூற முடியாது.’’

‘அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியை நீங்கள் மனதில் வைத்துச் செயல்படுகிறீர்களா?’

‘‘நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யாராலும் கூற முடியாது. வருகிற 2022-ம் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது சற்று நீண்டகால இலக்கு. ஆனால் இப்போதைக்கு, ஒவ்வொரு ஆண்டாக கவனம் செலுத்த விரும்புகிறேன்.’’

உச்ச இலக்கு

‘உங்களின் உச்ச இலக்கு என்ன?’

‘‘உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவது எனது இந்த ஆண்டு இலக்கு. அதை எட்டிவிட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எந்த ஒரு விளையாட்டு வீரருக்குமே தான் உலக அளவில் முதலிடத்தை எட்ட வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு இல்லை. ஆனால் அதற்காக நான் குறிப்பிட்ட கால வரையறை எதையும் நிர்ணயித்துக்கொள்ளவில்லை. ஸ்குவாஷில் மேலும் மேம்பாடு அடைய வேண்டும், முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. முதலிடத்தை நோக்கிய பயணத்துக்குத் தேவையான எந்த மாற்றத்தையும் நான் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறேன்’’

சவுரவ் கோஷலிடம் தெளிவும் நிதானமும் தெரிகின்றன.

சக சென்னைக்காரரும், தேசிய ஸ்குவாஷ் பயிற்சியாளருமான சைரஸ் போன்சா, ‘‘சவுரவின் புதிய சாதனைக்கான முழுப் பெருமையும் அவரையே சாரும். அவரது இந்த முன்னேற்றம், பொதுவாகவே இந்திய ஸ்குவாஷுக்கு நன்மை பயக்கும் விஷயம்’’ என்று பூரிப்புடன் சொல்கிறார்.

மேலும் பல சந்தோஷச் செய்திகளை சவுரவ் கோஷலும் அவரது சக வீரர், வீராங்கனைகளும் கொண்டு வரட்டும்.


Next Story