கேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங், வினேஷ் பெயர் பரிந்துரை


கேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங், வினேஷ் பெயர் பரிந்துரை
x
தினத்தந்தி 29 April 2019 10:45 PM GMT (Updated: 29 April 2019 8:13 PM GMT)

கேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங், வினேஷ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் கேல் ரத்னாவுக்கு, இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோரின் பெயர்களை இந்திய மல்யுத்த சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. அரியானாவை சேர்ந்த 25 வயதான பஜ்ரங் பூனியா கடந்த ஆண்டு (2018) நடந்த ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கமும், சமீபத்தில் சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றதுடன் தனது எடைப்பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அரியானாவை சேர்ந்த 24 வயதான வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடந்த ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கமும், சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்று இருந்தார்.

இதேபோல் இந்திய மல்யுத்த வீரர்கள் ராகுல் அவாரே, ஹர்பிரீத் சிங், வீராங்கனைகள் திவ்யா காக்ரன், பூஜா தண்டா ஆகியோரின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கும், பயிற்சியாளர்கள் வீரேந்தர் குமார், சுஜீத் மான், நரேந்திர குமார், விக்ரம்குமார் ஆகியோரின் பெயர்கள் துரோணாச்சார்யா விருதுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.


Next Story