பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
25-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

* ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனும், ஈட்டி எறிதலில் உலக சாதனையாளருமான இந்தியாவின் நீரஜ் சோப்ராவின் பெயரை விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரியதான கேல் ரத்னா விருதுக்கு இந்திய தடகள சம்மேளனம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. இதே போல் தேஜிந்தர் பால் சிங் (குண்டு எறிதல்), அர்பிந்தர்சிங் (டிரிபிள் ஜம்ப்), மன்ஜித் சிங்(800 மீட்டர் ஓட்டம்), ஸ்வப்னா பர்மன் (ஹெப்டத்லான்), டுட்டீ சந்த் (100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம்) ஆகியோரின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


* இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குத்துச்சண்டை லீக் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள். இந்த போட்டி, நமது வீரர்களுக்கு ஒலிம்பிக்குக்கு தயாராவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங் தெரிவித்தார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர் ஒரு சதம், 8 அரைசதங்களுடன் 692 ரன்கள் (12 ஆட்டம்) குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். தாயகம் திரும்புவதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எனக்கு ஆதரவாக இருந்த சன்ரைசர்ஸ் குடும்பத்துக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்த சீசன் மட்டுமின்றி கடந்த ஆண்டு நான் விளையாட போதிலும் ஆதரவாக இருந்தனர். நான் மீண்டும் களம் திரும்பிய போது முழு மனதுடன் வரவேற்ற அணியின் உரிமையாளர், அணியின் உதவியாளர்கள், வீரர்கள், ஊடகத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர் முழுவதும் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தேன். எஞ்சிய போட்டிகள் எங்கள் அணி வீரர்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என்று வார்னர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 20 ஓவர் போட்டி ஒன்றிலும், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கிறது. இதையொட்டி சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த மூத்த பேட்ஸ்மேன் சோயிப் மாலிக், தனிப்பட்ட விஷயம் காரணமாக 10 நாட்கள் அணியில் தொடர முடியாது என்று கூறியுள்ளார். கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியோடு அங்கிருந்து தாயகம் கிளம்பி விட்ட சோயிப் மாலிக் மே 11-ந்தேதி நடக்கும் 2-வது ஒரு நாள் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 25-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப். ஹீட்ஸ் அணி 67-44 என்ற புள்ளி கணக்கில் லயன்ஸ் அணியை தோற்கடித்தது. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் கங்கை அணி 42-13 என்ற புள்ளி கணக்கில் பிசியோகேர் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் அர்பன் அணி 50-20 என்ற புள்ளி கணக்கில் செயின்ட் ஜோசப்ஸ் அணியை தோற்கடித்தது.