தமிழ்நாடு கைப்பந்து சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் நியமனம் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழ்நாடு கைப்பந்து சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் நியமனம் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 May 2019 10:15 PM GMT (Updated: 6 May 2019 9:50 PM GMT)

தமிழ்நாடு கைப்பந்து சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமனை நியமனம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

விருதுநகர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் துரைசிங், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு கைப்பந்து சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது. இந்தநிலையில் சங்க பொதுக்குழு கூடி, தேர்தலை நடத்த 10 பேர் கொண்ட இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால கமிட்டி தன்னிச்சையாக செயல்படுகிறது. எனவே, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சங்க தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஜூன் 2-ந் தேதி தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. எனவே, சங்க தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியையும், வீரர்களை தேர்வு செய்ய குழுவையும் நியமிக்க வேண்டும்’ என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கைப்பந்து சங்கத்திற்கு 2019-2023-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அரிபரந்தாமன் நியமிக்கப்படுகிறார். ஜூன் மாதம் நடக்க உள்ள 21-வது தேசிய இளையோர் கைப்பந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வை முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரரும், தமிழ்நாடு கைப்பந்து சங்க செயலாளருமான ஏ.கே.சித்திரபாண்டியன், முன்னாள் தேசிய வீரர் ஏ.பழனியப்பன், திருச்சி மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் கோவிந்தராஜ், புதுக்கோட்டை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் வில்சன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இந்த குழு தகுதி உள்ள கைப்பந்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு பட்டியல் சங்கத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story