துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 10 May 2019 9:00 PM GMT (Updated: 10 May 2019 8:26 PM GMT)

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார், பிரான்சை சேர்ந்த பாரிஸ் சைன்ட் ஜெர்மைன் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

* நியூசிலாந்து–ஆஸ்திரேலியா லெவன் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து லெவன் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில் யங் 111 ரன்னும், ஜார்ஜ் ஒர்கெர் 59 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஆடம் ஜம்பா, மார்கஸ் ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 70 ரன்னும், டேவிட் வார்னர் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டீவன் சுமித் 108 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 2–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

* மும்பை கிரிக்கெட் சங்கம் சீனியர் உள்பட பல்வேறு வயது பிரிவு அணிகளின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. சீனியர் ஆண்கள் அணியின் பயிற்சியாளருக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும், ரஞ்சி கோப்பையை அணி வென்றால் ரூ.12 லட்சமும், 2–வது இடம் பிடித்தால் ரூ.6 லட்சமும் போனசாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 23 வயதுக்கு உட்பட்ட அணியின் பயிற்சியாளருக்கு ரூ.15 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும் அணி சி.கே. நாயுடு கோப்பையை வென்றால் ரூ.7½ லட்சமும், 2–வது இடம் பெற்றால் ரூ.3½ லட்சமும் போனசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார், பிரான்சை சேர்ந்த பாரிஸ் சைன்ட் ஜெர்மைன் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த மாதம் நடந்த பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாரிஸ் சைன்ட் ஜெர்மைன் அணி, ரென்னிஸ் அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டியின் முடிவில் நடந்த பதக்கம் வழங்கும் விழாவின் போது நெய்மார் ரசிகர் ஒருவரை தாக்கியது சர்ச்சையாக எழுந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் நெய்மாருக்கு 3 ஆட்டத்தில் விளையாட தடை விதித்துள்ளது. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கும் நெய்மார் பாரிஸ் சைன்ட் ஜெர்மைன் கிளப்பில் இருந்து வெளியேறுவார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

* சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 2–6, 6–4, 7–5 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனை எடுசியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். அங்கிதா ரெய்னா அரைஇறுதியில் சீன வீராங்கனை டுன் யிங்யிங்கை சந்திக்கிறார்.


Next Story