கராத்தேயில் இருந்து வில்வித்தைக்கு...


கராத்தேயில் இருந்து வில்வித்தைக்கு...
x
தினத்தந்தி 11 May 2019 10:53 AM GMT (Updated: 11 May 2019 10:53 AM GMT)

ஒரு விளையாட்டில் இருந்து இன்னொரு விளையாட்டுக்கு மாறி, அதில் அபாரமாக ஜொலிப்பது எளிதான விஷயம் அல்ல. அந்த அரிய விஷயத்தை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார், உத்தரபிரதேச இளம் வீராங்கனை மது வேத்வான்.

22 வயது மது, கராத்தேயில் இருந்து வில்வித்தைக்கு இடம்பெயர்ந்து கலக்கிக்கொண்டிருப்பவர்.

ஓர் எளிய கிராமப்புற பின்னணியைச் சேர்ந்த மது, ஆரம்பத்தில் மூங்கிலால் ஆன வில்லை கையில் ஏந்தியவர். இன்றோ அதிநவீன வில்லுடன் இந்திய அணிக்காக உலகமெங்கும் பயணிப்பவர்.

வில்தான் தனது வாழ்வு, உயிர்மூச்சு எல்லாம் என்கிறார், மது.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் அருகே உள்ள தனோரா திக்ரி கிராமத்தைச் சேர்ந்த மது, மிகவும் போராடித்தான் மேலே எழுந்திருக்கிறார்.

‘‘நான் விளையாட்டில் ஈடுபடுவதற்கு பெரிதும் ஊக்கமாக இருந்தவர் எங்கம்மாதான். 2009-ம் ஆண்டில் அவர் திடீரென மறைந்துவிட்டது, எனக்குப் பெரும் அதிர்ச்சி. அதிலிருந்து மீள முடியாமல், ஓராண்டு காலம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். அம்மாவின் அறிவுறுத்தலால்தான் நான் கராத்தே கற்றேன். போட்டி களிலும் பங்கேற்று வந்தேன்’’ என்று ஆரம்பக் கதை சொல்கிறார், மது.

2010-ல் மதுவின் கிராமத்தில், ஓய்வுபெற்ற ராணுவ வீரரான குல்தீப் வேத்வான் ஒரு வில்வித்தைப் பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார். அது மதுவின் விளையாட்டு வாழ்வையே மாற்றிவிட்டது.

அப்பயிற்சி நிலையத்தில் மது சேர்ந்தார். குல்தீப்பும், ஜார்கண்டில் இருந்து வந்திருந்த பயிற்சியாளர் பார்ஜு சிங்கும் வில்வித்தையில் மது முதலடிகளை எடுத்துவைக்க உதவினர்.

தனது நான்கு சகோதரிகளில் ஒருவரின் தூண்டுதலிலேயே வில்வித்தைப் பயிற்சியில் தான் இணைந்தேன் என்கிறார், மது.

‘‘வில்வித்தை எனக்குப் புதிய விளையாட்டுதான் என்றாலும், சரி, இதையும்தான் முயற்சித்துப் பார்ப்போமே என்று எண்ணினேன்’’ என்கிறார்.

அதற்காக இவர், ஏனோதானோவென்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அதனால்தான், வில்வித்தைப் பயிற்சி பெறத் தொடங்கிய சில மாதங்களிலேயே இவரால் தேசிய அளவிலான போட்டி ஒன்றில் 3 வெள்ளிப் பதக்கங்களை வெல்ல முடிந்தது.

‘‘அந்த வெற்றிதான், இந்த விளையாட்டில் என்னை மேலும் தீவிரம் கொள்ள வைத்தது’’ என்கிறார்.

விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் மதுவுக்கு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இடமும் கிடைத்தது. அதுதான், இவர் ‘ரீகர்வ்’ பிரிவில் நவீன வில்லுடன் பயிற்சி பெற இடம் அளித்தது. ஆரம்பத்தில் சாதாரண மூங்கில் வில்லில் பயிற்சி செய்துவந்த மது, பல்கலைக்கழகம் சென்ற பின் சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள வில்லைக் கையில் ஏந்தும் வாய்ப்பைப் பெற்றார். இந்த மாற்றம், மதுவிடம் எந்தத் தடுமாற்றத்தையும் ஏற் படுத்தவில்லை.

அதற்கு, பல்கலைக்கழக வில்வித்தைப் பயிற்சியாளர்களான ஜிவன்ஜோத் சிங், சுரீந்தர் சிங் ரந்தாவா ஆகியோர் முக்கியக் காரணம் என மது நன்றியை வெளிப்படுத்துகிறார்.

அவர்களின் உதவியுடனே, 2013-ல் ஜம்ஷெட்பூரில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

நவீன ‘ரீகர்வ்’ பிரிவுக்கு மாறிய ஓராண்டிலேயே, முன்னாள் உலகக் கோப்பை வெற்றி யாளரும், காமன்வெல்த் தங்கப் பதக்க வீராங்கனையுமான டோலா பானர்ஜியுடன் மோதும் அளவு முன்னேறினார், மது.

தற்போது, ‘ஒலிம்பிக் கோல்டு குவெஸ்ட்’ எனப்படும், ஒலிம்பிக்கை நோக்கி வீரர், வீராங்கனைகளைத் தயார்ப்படுத்தும் அமைப்பின் ஆதரவைப் பெற்றிருக்கிறார். வருகிற 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளில் இவரும் ஒருவர் என்கிறது அந்த அமைப்பு.

கடந்த 2014-ம் ஆண்டிலேயே, சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டிக்குத் தேர்வானார் மது. ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால் இவரால் சீனா செல்ல முடியவில்லை. ஆனாலும், அதே ஆண்டில் துருக்கியில் நடந்த இரண்டாவது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றார். 2014 ஆசியக் கோப்பை போட்டியில் வெள்ளி வென்ற மது, 2015 ஆசியக் கோப்பையில் தங்கத்தை வசப்படுத்தினார்.

தென்கொரிய வில்வித்தை வீராங்கனையும், மும்முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான கிம் போ பே-யை ஆதர்சமாகக் கொண்டிருக்கும் மது வேத்வான், அவரைப் போல முத்திரை பதிக்க ஆசைப்படுகிறார்.

அதற்கு நாமும் நமது அட்வான்ஸ் வாழ்த்துகளைக் கூறிவிடுவோம்.

Next Story