துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 15 May 2019 10:22 PM GMT (Updated: 15 May 2019 10:22 PM GMT)

* இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் பெடரேஷன், எச்.சி.எல். கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.

* இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் நியூசிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் கிரேக் மெக்மிலன் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறார். இதனை அடுத்து புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் பீட்டர் புல்டோன் நியமனம் செய்யப் படுகிறார். இந்த தகவலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

* கோல் குயிஸ் அமைப்பு சார்பில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்த வினாடி-வினா போட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் வருகிற 25-ந் தேதி பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் ஒரு அணியில் 2 பேர் இடம் பெறலாம். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் goalquiz@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய டிரையத்லான் சம்மேளன புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நேற்று நடந்தது. இதில் சுரேகா ராமச்சந்திரன் தலைவராகவும், அமன் குப்தா செயலாளராகவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளராக முரளிதரனும் மற்றும் நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

* இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக பிரச்சினை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்ஹா அளித்த ஒரு பேட்டியில், ‘கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை அதன் நிர்வாகிகள் தான் கவனிக்க வேண்டும். கோர்ட்டு நியமித்த வக்கீல்களோ, கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டியோ தொடர்ந்து நிர்வாகத்தை கவனிப்பது சரியாக இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story