பிற விளையாட்டு

பளு தூக்குதல் போட்டியில் சரமாரியாய் சாதனைகள் + "||" + Weightlifting achievements in weight lifting

பளு தூக்குதல் போட்டியில் சரமாரியாய் சாதனைகள்

பளு தூக்குதல் போட்டியில் சரமாரியாய் சாதனைகள்
பளு தூக்குதல் வீரர் ஜெரேமி லால்ரின்னுங்கா, சரமாரியாய் சாதனைகள் புரிந்துவருகிறார்.
புதிய சாதனைகள் என்பவை எங்கோ, எப்பொழுதோ நிகழ்பவை. ஆனால் மிசோரம் மாநில இளம் பளு தூக்குதல் வீரர் ஜெரேமி லால்ரின்னுங்கா, சரமாரியாய் சாதனைகள் புரிந்துவருகிறார்.

சமீபத்தில் சீனாவின் நிங்போவில் நடைபெற்ற ஆசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் அடுத்தடுத்து பல சாதனைகளை நிகழ்த்தினார், ஜெரேமி.

ஆண்களுக்கான 67 கிலோ எடைப் பிரிவில் ‘குரூப் பி’யில் போட்டியிட்ட ஜெரேமி, மொத்தமாக 297 கிலோ எடை தூக்கினார். அதன் மூலம், ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் மற்றும் மொத்தத்தில், உலக இளையோர் அளவிலும், ஆசிய அளவிலும் புதிய சாதனைகள் படைத்தார்.

ஏற்கனவே இளையோர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரான ஜெரேமி, இதுவரை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் 15 சாதனைகளைத் தகர்த்திருக்கிறார்.

இவரால் முறியடிக்கப்பட்ட 6 சர்வதேச சாதனைகளில், 3 உலக இளையோர் சாதனைகளும், 3 ஆசிய இளையோர் சாதனைகளும் அடங்கும். தேசிய அளவில் 9 சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் ஜெரேமி, தேசிய இளையோர் போட்டி, ஜூனியர் நேஷனல், சீனியர் நேஷனல் போட்டிகளில் தலா 3 வீதம் அச்சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்.

நமக்கு இது ஆச்சரியமாகத் தெரிந்தாலும், ஜெரேமி இன்னும் பல சாதனைகள் புரிவார் எனச் சொல்கிறார், இந்திய தேசிய பளு தூக்குதல் பயிற்சியாளர் விஜய் சர்மா.

‘‘தற்போது 16 வயதே ஆகும் ஜெரேமி, சரியான திசையில் முன்னேறி வருகிறார். இந்த இளம் வயதில், சீரான முன்னேற்றத்தை அவர் காட்டுகிறார். ெஜரேமியின் முன்னேற்ற வேகத்தை மதிப்பிட்ட நாங்கள், அவரை 67 கிலோ எடைப் பிரிவுக்கு மாற்றினோம். அதன்மூலம், அவருக்கு இன்னும் அதிக வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதினோம். அந்த நம்பிக்கை தவறானதல்ல என்று தனது செயல்பாட்டின் மூலம் ஜெரேமி நிரூபித்திருக்கிறார்’’ என்கிறார் சர்மா.

சீனாவில் 297 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம், ஜெரேமி தனது தனிப்பட்ட சிறந்த அளவை 9 கிலோ அளவுக்குக் கூட்டியிருக் கிறார். இதே வேகத்தில் அவர் முன்னேறினால், நிச்சயமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடுவார்.

‘‘300 கிலோ எடை அளவைத் தாண்டும் அளவுக்கு ஜெரேமிக்குத் திறமை இருக்கிறது. வருகிற ஜூலையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டி யிலேயே அவர் அதைச் சாதித்து விடுவார், அதன் மூலம் அடுத்த ஒலிம்பிக்கில் தனது இடத்தையும் உறுதிப்படுத்தி விடுவார்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார், சர்மா. ஜெரேமி தேசிய முகாமில் நுழைந்த நாள் முதல் இவர்தான் அவருக்குப் பயிற்சி அளித்துவருகிறார்.

கடந்த பிப்ரவரியில், தாய்லாந்தில் நடைபெற்ற ஒரு போட்டிதான், ஜெரேமி 67 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற முதல் போட்டியாகும். அதில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றாலும், அவர் தூக்கிய 288 கிலோ, புதிய தேசிய சாதனை ஆகும்.

சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 163 கிலோ தூக்கியதன் மூலம், இப்பிரிவில் முந்தைய உலக இளையோர் சாதனையான 161 கிலோவை தகர்த்தார் ஜெரேமி.

ஆனாலும் இந்தப் போட்டியில் இவர், 300 கிலோ எடை அளவைத் தாண்டவில்லை என்பதில் இந்திய வட்டாரத்துக்கு கொஞ்சம் ஏமாற்றம்.

ஆனால் சர்மாவோ, ‘‘போட்டியில் இதுவும் ஓர் அங்கம்தான். மற்ற போட்டியாளர்கள் என்ன எடை தூக்கக்கூடும் என்று எதிர்பார்த்து, அதற்கேற்ப நமக்கான 3 முயற்சிகளிலும் எடையை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் ஜெரேமி தனது கடைசி முயற்சியில் 166 கிலோ எடை தூக்க முயன்றார். ஆனால் அவரால் அது முடியவில்லை. அதனால் என்ன, ஜெரேமி விரைவிலேயே ‘300’ அளவைக் கடந்துவிடுவார்’’ என்கிறார், உறுதியோடு.

அந்த நம்பிக்கை நமக்கும் இருக்கிறது!