ஸ்குவாஷ் ராணி ஜோஸ்னாவின் வெற்றிப்பயணம்


ஸ்குவாஷ் ராணி ஜோஸ்னாவின் வெற்றிப்பயணம்
x
தினத்தந்தி 18 May 2019 8:16 AM GMT (Updated: 18 May 2019 8:16 AM GMT)

ஸ்குவாஷில் தான் இன்னும் ராணிதான் என்று நிரூபித்திருக்கிறார்

சென்னை வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா. ஆசிய தனி நபர் சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்திருக்கிறார் இவர்.

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜோஸ்னாவுடன், ஆண்கள் பிரிவில் சவுரவ் கோஷலும் வெற்றிக்கிரீடம் சூடி வந்தது இந்திய ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி தந்தது.

இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கின் முதல் தகுதிநிலை வீராங்கனையும் வலுவான எதிராளியுமான ஆன்னி ஆவை வீழ்த்தினார், ஜோஸ்னா.

அந்த வெற்றி மிதப்பில் இருந்து இன்னும் ஜோஸ்னா மீளவில்லை.

அது... அற்புதம்

‘‘அது ஓர் அற்புதமான உணர்வு. நான் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆசிய தனிநபர் பட்டத்தை நமது சென்னையில் வென்றேன். மீண்டும் அதைக் கைப்பற்றியிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும், இந்தப் போட்டியில் முதல் தகுதி நிலை பெற்றிருந்த, சமீபத்திய போட்டிகளில் பலமுறை என்னை வீழ்த்தியுள்ள ஆன்னியை வென்றிருப்பது கூடுதல் சந்தோஷம் தருகிறது. நான் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரிதான் பயிற்சி பெறுகிறேன். இந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் எல்லாமே எனக்குச் சிறப்பாக அமைந்தன. அதாவது, நான் ஆடிய ஷாட்கள், களத்தில் எனது உடல் தகுதிநிலை ஆகிய எல்லாமே.

ஆசியப் போட்டியில் நான் எதிர்கொண்ட இரு முக்கிய வீராங்கனைகள், ‘சிவா’வும் (மலேசிய வீராங்கனை சிவசங்கரி சுப்பிரமணியம்), ஹாங்காங்கின் ஆன்னியும். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் நான் சிவாவிடம் தோல்வி அடைந்திருந்தேன். அதேபோல, தற்போதைய ஆசியப் போட்டிக்கு இரண்டு வார காலத்துக்கு முன்புதான் ஆன்னியிடம் மக்காவில் வெற்றியைப் பறிகொடுத்திருந்தேன். எனவே அவர்களை எதிர்கொள்ள நான் நன்றாகத் தயாராகி இருந்தேன்’’ என்று தனது தயார்நிலை குறித்து விளக்கிச் சொல்கிறார், ஜோஸ்னா.

வலுவான எதிராளி

ஆனாலும் இறுதிப் போட்டியில் இயல்பாக ஒரு பதற்றம் இருந்திருக்கும் இல்லையா, அதிலும் கடைசியாகத் தான் மோதிய 20 ஆட்டங்களில் 12-ல் தோல்வியைப் பரிசளித்த ஆன்னியை எதிர்கொண்டபோது என்று கேட்டால்,

‘‘நிச்சயம் ஸ்குவாஷ் கோர்ட்டில் ஆன்னி ஒரு கடினமான வீராங்கனை. நான் அவரது ஸ்குவாஷ் திறமையை மட்டும் கூறவில்லை. உடல்ரீதியாகவும் அவர் வலுவானவர்தான். கோர்ட்டில் தனக்குக் கிடைக்கும் இடத்தையும் நேரத்தையும் மிக அருமையாகப் பயன்படுத்திக்கொள்பவர் அவர். ஆன்னியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்வது உறுதியான உடனே, நான் அவருக்கு எதிரான ஆட்ட வியூகம் மட்டுமின்றி, உடல்ரீதியாக அவரை எப்படி எதிர்கொள்வது என்ற திட்டத்தையும் தீட்டிவிட்டேன். ஆட்ட நேரம் முழுவதும் நான் மிகவும் அமைதியாக இருந்தேன். அதனால் ஒவ்வொரு ‘ஷாட்’டையும் ஆடுவதற்கு முன்னால் என்னால் தெளிவாகச் சிந்திக்க முடிந்தது. அதுதான் எங்கள் இருவருக்கு இடையிலான வித்தியாசமாக அமைந்தது. ஆன்னியை விட நான் உடல்ரீதியாக மிகவும் ரிலாக்சாக இருந்தேன். எனவே முக்கியமான புள்ளிகளைக் குவிப்பதற்குத் தேவையான சக்தியை தக்கவைத்திருந்தேன். குறிப்பிட்ட நாளில் நான், அவரை விட சிறந்த வீராங்கனையாக இருந்தேன் என்று கூறலாம்’’ என்கிறார் நிதானமாக.

நெருக்கடியைக் கையாண்டவிதம்

ஆட்டம் ஒருபுறம் இருந்தாலும், இறுதி மோதலின் நெருக்கடியை எவ்வாறு கையாண்டீர்கள் என்ற கேள்விக்கு,

‘‘எந்த ஒரு தொடரிலும் இறுதிப் போட்டி என்றால் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். நாம் யோசித் தாலும் யோசிக்காவிட்டாலும், முந்தைய ஆட்டங்கள் எல்லாம் நம் தலைக்குள் ஓடும். முந்தைய போட்டியில் ஆன்னி, 0-3 என்ற கணக்கில் என்னைத் தோற்கடித்திருந்தார். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் அவரை எதிர்கொள்கையில் முந்தைய போட்டி போல எளிதாக வீழ்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனது ஆட்டத்திலும் சில மாற்றங்கள் செய்திருந்தேன். ஆட்டத்தின் இரண்டாவது கேம் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்தது. அதில் முதல் நான்கு புள்ளிகளைப் பெற்ற நான், அடுத்து தொடர்ந்து எட்டு புள்ளி களைப் பறிகொடுத்து கேமை இழந்தேன். அதற்கு எனது கவனம் குறைந்ததுதான் காரணம். ஆனால் மூன்றாவது கேமில் சுதாரித்துக்கொண்ட நான், அடிப்படை விஷயங்களை மறக்காமல் ஆடி வென்றேன்’’ என்று வெற்றிக் கதை சொல்கிறார்.

எது கடினம்?

ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் இரண்டில் கடினமானது எது என்ற கேள்விக்கு ஜோஸ்னாவிடம் இருந்து வரும் பதில்...

‘‘இரண்டுமே கடினமானவைதான். இவை இரண்டிலும் நான் குறிப்பிட்ட அதே சில வீராங்கனைகளுடன்தான் ஆடியிருக்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் அணிகள் பிரிவில் வெள்ளி வென்றது சிறப்பான உணர்வு. அதேநேரம், ஆசிய சாம்பியன்ஷிப்பும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இணையாக முக்கியமானதே.’’

‘அடுத்து நீங்கள் எந்தப் போட்டிக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறீர்கள்?’

‘‘இந்த வாரம் தொடங்கும், பெருமைக்குரிய பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் விளையாடுவதற்காகத் தற்போது நான் தயாராகிக் கொண்டி ருக்கிறேன்’’ -உற்சாகம் மாறாமலே விடைகொடுக்கிறார், ஜோஸ்னா சின்னப்பா.


Next Story