பிற விளையாட்டு

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சைக்கிள் பிரியர் ஹரி + "||" + Bicycle Briar Hari from Chennai

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சைக்கிள் பிரியர் ஹரி

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சைக்கிள் பிரியர் ஹரி
கடந்த 3 வருடங்களாகத்தான் சைக்கிள் பயணங்களை மேற்கொள்கிறார்.
மூன்று வருடங்களுக்குள், சைக்கிள் பயணங்களில் இருக்கும் உச்சபட்ச சாதனைகளை எல்லாம் நிகழ்த்திவிட்டார். 10 கிலோ மீட்டர், 50 கிலோ மீட்டர் என மெதுவாக சைக்கிள் பெடலை மிதித்தவர், இன்று பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடக்கும் ‘பாரீஸ் பிரஸ்ட் பாரீஸ் 2019’ என்ற பிரமாண்ட சைக்கிளிங் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார். அதுபற்றி, ஹரி என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்.

சைக்கிள் பயணங்களில் ஆர்வம் வந்தது எப்படி?

2016-ம் ஆண்டுதான் என்னுடைய சைக்கிள் பயணம் தொடங்கியது. வார நாட்களில் ஐ.டி.துறையில் வேலை செய்யும் எனக்கு, வார இறுதிநாட்களில் சைக்கிள் ஓட்ட பிடித்திருந்தது. குறிப்பாக சென்னையில் ‘சைக்கிளிங் குழுக்கள்’ அதிகம் என்பதால், நானும் அவர்களில் ஒருவனாக இணைந்து சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். தொடக்கத்தில் சைக்கிளின் பெடலை மிதிக்க சிரமப்பட்டாலும், வெகுவிரைவிலேயே பழகிவிட்டேன். அதனால் மோட்டார் சைக்கிளை ஓரம் நிறுத்திவிட்டு, சைக்கிளை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தேன். கடந்த மூன்று வருடங்களாக அலுவலகத்திற்கு சைக்கிளிலேயே சென்று வருகிறேன்.

சைக்கிள் பயணங்களில் சாதிக்கும் எண்ணம் வந்தது எப்படி?

சைக்கிளிங் குழுக்களில் இருந்து அடிக்கடி தொலைதூர பயணங்களுக்கு ஏற்பாடு செய்வார்கள். அதனால் 20 கிலோ மீட்டர், 50 கிலோ மீட்டர், 100 கிலோ மீட்டர், 200 கிலோ மீட்டர்... என பயண தூரத்தை மறந்து சைக்கிளை மிதிக்க, உடலும் மனதும் பழகிப்போனது. அதோடு, சைக்கிள் பயணங்களின் மூலம் புதுமையான சாதனைகளை படைக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். முதலில் 200 கிலோ மீட்டர் பயணித்து ‘ராண்டனர்’ என்ற பட்டத்தை வென்றேன். அடுத்ததாக 300 மற்றும் 400 கிலோ மீட்டரை எட்டிப்பிடிக்க ஆசைவந்தது. அதையும் முடித்து காட்டினேன். எல்லா முயற்சிகளுமே வெற்றியில் முடிந்ததால், 600 கிலோமீட்டர் பயணத்தையும் நிறைவு செய்து ‘சூப்பர் ராண்டனர்’ என்ற பட்டத்தை வெல்ல ஆசைப்பட்டேன். அதுவும் 2018-ம் ஆண்டு கனிந்தது.

‘பாரீஸ் பிரஸ்ட் பாரீஸ்’ சைக்கிளிங் திருவிழாவில் சைக்கிள் ஓட்ட இருப்பதை பற்றி கூறுங்கள்?

‘சூப்பர் ராண்டனர்’ பட்டம் பெற்றவர்களால் மட்டுமே, நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் பாரீஸ் பிரஸ்ட் பாரீஸ் சைக்கிளிங் திருவிழாவில் கலந்து கொள்ளமுடியும். ‘ஆடெக்ஸ் இந்தியா’ என்ற சர்வதேச சைக்கிளிங் அமைப்பு வழங்கும் ‘சூப்பர் ராண்டனர்’ பட்டம் பாரீஸ் பிரஸ்ட் பாரீஸ் போன்ற சர்வதேச நிகழ்வுகளுக்கான தகுதி சான்றிதழ் எனலாம். குறிப்பாக எந்த வருடம் ‘பாரீஸ் பிரஸ்ட் பாரீஸ்’ நிகழ்வு நடக்கிறதோ, அந்த வருடம் ‘சூப்பர் ராண்டனர்’ பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், 2018-ல் வாங்கிய சூப்பர் ராண்டனர் பட்டத்தை ஓரங்கட்டிவிட்டு, இந்த வருடத்திற்கான சூப்பர் ராண்டனர் பட்டத்தை வாங்க, சைக்கிளில் கிளம்பினேன். கடந்த வருடத்தை போன்று, 200 கி.மீ., 300 கி.மீ., 400 கி.மீ., 600 கி.மீ. தூரத்தை சைக்கிளில் விரட்டிப்பிடித்து, மீண்டும் பட்டம் பெற்றேன். அதன் வாயிலாகதான் எனக்கு பாரீஸில் சைக்கிள் ஓட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சைக்கிளில் பயணிப்பவர்களின் உச்சபட்ச ஆசையும் இதுவே. அது எனக்கு வெகு விரைவிலேயே கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சைக்கிள் பயணங்களில் உங்களது தனித்துவமான சாதனைகள் ஏதுவும் உண்டா?

இருக்கிறது. கடும் வெயில், புயல்... என காலநிலை எதுவாக இருப்பினும், ஒரு வருடம் முழுக்க தினமும் 50 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டவேண்டும் என்ற ஆசையை, கடந்த வருடம் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றினேன். இரவு-பகல் பாராமல், அலுவலக வேலைகளுக்கு மத்தியிலும் 365 நாட்களும், 50 கிலோ மீட்டர்கள் சைக்கிளில் சவாரி வந்தது, சைக்கிள் பயணங்களில் என்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. வெளியூர் பயணங்களிலும், மாரத்தான் போட்டிகளில் வெகு தூரம் ஓடியபோதும், இந்த சவாலை நிறைவேற்றுவது பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.

மேலும் சென்னை முதல் விஜயவாடா வரையிலான 1000 கிலோமீட்டரை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறேன். அதேசமயம் சென்னை-திண்டுக்கல்-பழனி-திருச்சி-கோவை போன்ற பகுதிகளில் சைக்கிளில் வலம் வந்து, 1200 கிலோமீட்டர் தூரத்தையும் எட்டிப்பிடித்திருக்கிறேன். சமீபத்தில் கூட, மதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான தூரத்தை மடக்கி வைக்கக்கூடிய சைக்கிளில் நிறைவு செய்தேன்.

உங்களது எதிர்கால திட்டங்கள் என்ன?

‘பாரீஸ் பிரஸ்ட் பாரீஸ்’ நிகழ்வை போல, இங்கிலாந்தில் ‘லண்டன் எடின்பெர்க் லண்டன்’ என்ற நிகழ்வும் பிரபலமானது. அதில் 2021-ம் ஆண்டு கலந்து கொள்ள திட்டமிட்டிருக்கிறேன். மேலும் பெங்களூருவில் நடத்தப்படும் ‘டேட்ஸ் ஆப் ஹெவன்’ என்ற மலையேற்ற போட்டியிலும் கலந்து கொள்ள இருக்கிறேன்.