பிற விளையாட்டு

‘ஆக்ரோஷமே எனது அடையாளம்’ - குத்துச்சண்டை வீரர் சிவதாபா + "||" + 'Agrosis is my identity' - boxer Sivathappa

‘ஆக்ரோஷமே எனது அடையாளம்’ - குத்துச்சண்டை வீரர் சிவதாபா

‘ஆக்ரோஷமே எனது அடையாளம்’ - குத்துச்சண்டை வீரர் சிவதாபா
இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான சிவ தாபா, ‘ஆக்ரோஷமே எனது அடையாளம்’ என்கிறார்.
25 வயது சிவ தாபா, உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றவர், அதேபோல ஆசிய அளவில் தொடர்ந்து நான்கு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர். கடந்த மாதம் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் 60 கிலோ எடைப் பிரிவில் சாதித்தார் இவர்.

இந்தத் தொடரில் சிவ தாபா, 2013-ம் ஆண்டு தங்கமும், 2015-ல் வெண்கலமும், 2017-ல் வெள்ளிப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.

‘‘கடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுடன் ஒப்பிடும்போது நான் தற்போது மிகவும் சுதந்திரமாக சண்டையிடு கிறேன். அதற்கும் மேலாக, என்னால் குத்துச்சண்டை வளையத்துக்குள் இறங்கியதுமே நடுவர்களைக் கவர முடிகிறது. ஆக்ரோஷம்தான் எனது அடையாளமாக இருந்திருக்கிறது. தற்போது நான் அதை மேலும் கூட்டிக்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார்.

இப்போது 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் சிவ தாபா, அடுத்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியைக் குறிவைத்து, 63 கிலோ எடைப் பிரிவுக்கு மாறவிருக்கிறார்.

‘‘அதிக குத்துகளை விடவிட, நான் குத்துச்சண்டை சுற்றுகளில் வெல்லும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இந்த பாணி குத்துச்சண்டைக்குத்தான் தற்போது நான் மாறிக்கொண்டிருக்கிறேன். அதற்கு எனது பயிற்சியாளர்களும் உதவு கிறார்கள். இந்திய குத்துச்சண்டை தலைமை செயல்பாட்டு இயக்குனர் சான்டியாகோ நீவா, எனது குத்துச்சண்டை நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். நானும் அதை மேம்படுத்திக்கொள்ள உழைத்து வருகிறேன்’’ என்று தான் தயாராகும் விதம் குறித்துக் கூறுகிறார், சிவ தாபா. வெற்றிக்கான தனது தாகம் எப்போதும் அடங்காது என்று இவர் சொல்கிறார்.

ஐந்து பேருடன் பிறந்தவரான சிவ தாபா, தனது சகோதரி கவிதாதான் தன்னுடைய ஊக்க சக்தி என்கிறார். அதேபோல, தியானமும் தன் மன வலுவைக் கூட்டுகிறது என்கிறார்.

‘‘நான் தினமும் குத்துச்சண்டைப் பயிற்சியுடன், தியானம் செய்யவும் தவறுவதில்லை. தியானம்தான் என்னை நானே அறிந்துகொள்ள உதவுகிறது. காரணம், எல்லாமே நம் உள்ளிருந்துதானே தொடங்குகின்றன?’’ என்கிறார் சிவ தாபா, நிதானமாக.

சிவ தாபாவின் சொந்த மாநிலமான அசாம், சிறந்த குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கும் தொழிற்சாலையாக இருந்து வருகிறது. இந்திய ஓபன் குத்துச்சண்டைப் போட்டியில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் போட்டியிட்டது குறித்து சிவ தாபாவின் கருத்து...

‘‘எனது சொந்த ஊரில் போட்டியிட்டது மிகவும் மகிழ்ச்சி. எங்களின் மோதல், உள்ளூரின் இளம் வீரர்களுக்கு மிகவும் தூண்டுதலாக அமைந்திருக்கும் என்பதே மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போன்ற வீரர்கள் சப்-ஜூனியர் நிலையில் குத்துச்சண்டையில் ஈடுபட்டபோது, எங்கள் சீனியர்களைப் பார்த்துத்தான் ஊக்கம் பெற்றோம், அவர்கள் எப்படி மோதுகிறார்கள் என்று பார்த்து கற்றுக்கொண்டோம்.

அதேபோல நாங்களும் இளையோருக்கு ஊக்கமாக அமைந்து, அவர்கள் இந்த விளையாட்டில் ஈடுபடத் தூண்டுதலாக இருந்தால், அதுவே பெரிய ஆசீர்வாதம். நிச்சயமாக வடகிழக்கு மாநிலங்களில் திறமைக்குக் குறைவில்லை. இந்திய ஓபன் குத்துச்சண்டை போன்ற பெரிய போட்டிகள் இப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றால், மேலும் பல இளைஞர், இளைஞிகள் விளையாட்டை தீவிரமாக எடுத்துக்கொண்டு இதில் ஈடுபட ஆரம்பிப்பார்கள்’’ என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறார், சிவ தாபா.

அவரது எண்ணம் போல நடக்கட்டும்.