உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றம்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றம்
x
தினத்தந்தி 26 Jun 2019 11:28 PM GMT (Updated: 26 Jun 2019 11:28 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றப்பட உள்ளது.


* பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று ஆண்கள் பிரிவில் 2 ஆட்டங்களும், பெண்கள் பிரிவில் 2 ஆட்டங்களும் நடக்க இருந்தன. சென்னையில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக இந்த 4 ஆட்டங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான இன்றைய ஆட்டங்கள் மாலையில் 5 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

* ஆசிய கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டியில் ‘இ’ பிரிவின் தொடக்க சுற்றில் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, மனங் மார்ஷியாங்டி கிளப் (நேபாளம்) அணியை எதிர்கொண்டது. இதில் சென்னையின் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் மனங் மார்ஷியாங்டியை வீழ்த்தியது. வெற்றி பெற்றாலும் சென்னையின் எப்.சி. அணி தனது பிரிவில் முதல் இடத்தை பிடிக்காததால் அடுத்த சுற்று (நாக்-அவுட்) வாய்ப்பை இழந்தது.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் உள்ளூர் அணியான இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது (ஜூன் 30-ந்தேதி) இந்திய அணியின் சீருடை மாற்றப்படும் என்று தெரிகிறது. ஊதா நிற பின்னணியில் ஆரஞ்சு நிறமும் இடம் பெறும் வகையில் புதிய சீரூடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரஞ்சு நிறம் இந்திய அணியின் சீருடையில் இடம் பெறுவதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி எல்லா இடத்திலும் காவியை புகுத்த முயற்சிப்பதாக மும்பையை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி குற்றம்சாட்டி உள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் உடல் தகுதியை எட்டிவிட்டதாக அறிகிறேன். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் புவனேஷ்வர்குமார், முகமது ஷமி ஆகியோரில் யாரை சேர்ப்பது என்று என்னிடம் கேட்டால் புவனேஷ்வர்குமார் பெயரை தான் சொல்வேன். ஏனெனில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் கிறிஸ் கெய்ல் தடுமாறுவார் என்பதாலேயே இதனை சொல்கிறேன்’ என்றார்.

* நெஞ்சுலி வலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். தான் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.


Next Story